ஆட்சியாளர்கள் Vs அதிகாரிகள்; சிக்கித் தவிக்கும் மக்கள் - புதுச்சேரி அதிமுக பரபரப்பு குற்றச்சாட்டு

By அ.முன்னடியான்

புதுச்சேரி: ஆட்சியாளர்கள் ஒருபுறமும், அதிகாரிகள் மறுபுறம் வேறு சிந்தனையோடும் செயல்படுவதால் இடையில் மக்கள் பெருத்த ஏமாற்றத்துக்கு உள்ளாக்கப்படுகின்றனர் என்று புதுச்சேரி அதிமுக குற்றம் சாட்டியுள்ளது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அறிவித்த இலவச அரிசி, சர்க்கரை மற்றும் ரூ.500 மதிப்புள்ள மானிய விலையிலான உணவுப்பொருட்கள் வழங்காத ஆளும் என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி அரசை கண்டித்து புதுச்சேரி மாநில அதிமுக சார்பில் அண்ணா சிலை அருகே சாலை மறியல் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.

மாநில செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார். மாநில இணைச் செயலாளர்கள் வீரம்மாள், முன்னாள் கவுன்சிலர் கணேசன், திருநாவுக்கரசு, மாநில பொருளாளர் ரவிபாண்டுரங்கன், மாநில துணைச் செயலாளர்கள் குணசேகரன், நாகமணி, காந்தி, கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளர் அன்பழகன் பேசும்போது: புதுச்சேரியில் ஆட்சி நடத்தும் என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி அரசு பண்டிகை காலத்தில் அறிவித்த அறிவிப்புகளை கூட செயல்படுத்தாமல் மக்களை ஏமாற்றும் மக்கள் விரோத அரசாக உள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு முதல்வர் ரங்கசாமி ரேஷன் கார்டு ஒன்றுக்கு 10 கிலோ இலவச அரிசி, 2 கிலோ சர்க்கரை மற்றும் ரூ.500 மானியத்துடன் 10 பொருட்கள் அடங்கிய தீபாவளி தொகுப்புகள் ரேஷன் கடைகளை திறந்து அதன் மூலம் வழங்கப்படும் என அறிவித்தார். ஆனால் ரேஷன் கடைகளும் திறக்கப்படவில்லை.

ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களின் தொகுதிகளுக்கு மட்டும் இலவச அரிசியும், சர்க்கரையும் வழங்கப்பட்டு வருகிறது. சட்டப்பேரவைத் தலைவர், அமைச்சர்கள், எதிர்கட்சி தலைவர் ஆகியோர்களின் தொகுதிகளில் மட்டும் மக்கள் வசிப்பதாக கருத்தில் கொண்டு இலவச அரிசி மற்றும் சர்க்கரை வழங்கப்பட்டுள்ளது. உப்பளம், உருளையன்பேட்டை, முத்தியால்பேட்டை, முதலியார்பேட்டை, லாஸ்பேட்டை, உழவர்கரை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் இதுவரை இலவச அரசியும், சர்க்கரையும் வழங்கப்படவில்லை.

அதே போன்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரூ.1000 மதிப்புள்ள 10 உணவு பொருட்கள் ரூ.500 மானிய விலையில் வழங்கப்படும் என அறிவித்திருந்ததை நம்பி மக்கள் கையில் பையுடன் பொருட்களை வாங்க வீதி வீதியாய் அலைந்து கொண்டிருக்கின்றனர். அறிவித்த பண்டிகை கால உணவு பொருட்களை மக்களுக்கு வழங்குவதில் கூட இந்த அரசு முழு தோல்வி கண்ட அரசாக உள்ளது. பல விஷயங்களில் முதல்வர் மக்கள் நலனுக்கான திட்டங்களை அறிவிப்பதும், அந்த திட்டங்கள் உடனுக்குடன் செயல்வடிவம் பெறாமல் இருப்பதும் வாடிக்கையான ஒன்றாக உள்ளது.

ஆட்சியாளர்கள் ஒருபுறமும், மறுபுறம் அதிகாரிகள் வேறு சிந்தனையோடும் செயல்படுவதால் இடையில் மக்கள் பெருத்த ஏமாற்றத்துக்கு உள்ளாக்கப்படுகின்றனர். எந்த நோக்கத்துக்காக இந்த விழா கால அறிவிப்பு வெளியிடப்பட்டதோ அந்த விழாக்காலமே முடிந்த பிறகும் மக்களுக்கு சென்றடையவில்லை என்றால் இதை என்னவென்று சொல்வதென்றே தெரியவில்லை. ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள் மக்களை ஏமாற்றாமல் அறிவித்த பண்டிகை கால பொருட்கள் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE