பல்லடம்: பல்லடத்தில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் கிளீனர் கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக, ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.
பல்லடத்தில் பொள்ளாச்சி-உடுமலை சாலை பிரிவில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடப்பதாக அப்பகுதியினர் இன்று (நவ. 2) பல்லடம் போலீஸாருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் அங்கு சென்ற போலீஸார் ஆண் சடலத்தை கைப்பற்றி விசாரித்தனர். அப்போது அந்த ஆண் சடலம் தலையில் பலத்த காயம் அடைந்த நிலையில் இருப்பதை போலீஸார் பார்த்தனர்.
தொடர்ந்து போலீஸார் நடத்திய விசாரணையில் கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த சிஜூ (40) என்பது தெரியவந்தது. கேரள மாநிலத்தை சேர்ந்த ஓட்டுநர் செல்வகுமார் (40) என்பவருடன், கிளீனர் சிஜூ (40) ஆகியோர் கேரள மாநிலத்தில் இருந்து விறகு ஏற்றிக்கொண்டு சரக்கு வேனில் பல்லடத்துக்கு வந்தனர். இருவருக்கும் திருமணம் ஆகவில்லை.
நேற்று முன் தினம் விறகை இறக்கிவிட்டு, பல்லடத்தில் பொள்ளாச்சி- உடுமலை சாலையில் மது அருந்தி உள்ளனர். அப்போது மதுபோதையில் தகராறு ஏற்பட்டது. அப்போது சிஜூவை, குக்கர் மூடியால் செல்வக்குமார் அடித்து கொலை செய்தது தெரியவந்தது. ரத்தக்கறையுடன் குக்கர் மூடியை கைப்பற்றிய போலீஸார், வாகன ஓட்டுநர் செல்வகுமார் மீது கொலை வழக்கு பதிந்து இன்று கைது செய்தனர்.