ஓசூரில் ஒலி மாசு அதிகம்; வளசரவாக்கத்தில் காற்றின் தரம் மோசம்: கடந்த தீபாவளியைவிட குறைவு என தகவல்

By KU BUREAU

சென்னை: தீபாவளியன்று சென்னை, வளசரவாக்கத்தில் காற்றின் தரம் மோசமாக இருந்தபோதிலும், கடந்த ஆண்டைவிட குறைவாகவே தரக்குறியீடு பதிவானதாக தமிழ்நாடுமாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

தீபாவளிக்கு 7 நாட்களுக்கு முன்பாகவும், தீபாவளி அன்றும், தீபாவளிக்கு 7 நாட்களுக்கு பின்பாகவும் முக்கிய காற்று மாசு காரணிகளின் அளவுகளை கண்காணிக்க மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்களை உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும், காலை 6 முதல் 7 மணிவரையிலும், இரவு 7 முதல் 8 மணிவரை மட்டுமே பசுமை பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என தமிழக அரசும், மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியமும் வலியுறுத்தியிருந்தன.

அதைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியரகம், மாநகராட்சி, காவல்துறை, பள்ளி, கல்லூரி மாணவர்கள்,செய்தி மற்றும் ஊடகங்களுடன் இணைந்து விழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், தீபாவளி பண்டிகையின்போது பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் சுற்றுப்புற காற்றின்மாசு தர அளவையும், ஒலி மாசு அளவையும் கண்டறிய சென்னை, கோவை, கடலூர், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், தஞ்சாவூர், திருச்சி, வேலூர், சேலம், செங்கல்பட்டு, திண்டுக்கல், ஓசூர், தூத்துக்குடி, திருப்பூர், நாகப்பட்டினம், காஞ்சிபுரம் மாவட்டங்களின் 39 இடங்களில் கடந்த 24 முதல் நவ.7-ம்தேதி வரை தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் ஆய்வு மேற்கொள் ளப்படுகிறது.

குறிப்பாக தீபாவளி நாளான நேற்று முன்தினம் (அக்.31) காலை 6முதல் நேற்று (நவ.1) காலை 6 மணிவரை காற்றுத்தர அளவு கண்காணிக் கப்பட்டது. அதன் அடிப்படையில் காற்றுத்தர குறியீட்டு அளவு சென்னையில் குறைந்தபட்சமாக திருவொற்றியூரில் 150, அதிகபட்சமாக வளசரவாக்கத்தில் 287 வரை இருந்தது கண்டறியப்பட்டது. தமிழக அளவிலும் வளசரவாக்கத்திலேயே அதிகபட்சமாகவும், கடலூரில் 80 என்றளவில் குறைந்தபட்சமாகவும் காற்று மாசு பதிவாகியுள்ளது.

மேலும், தீபாவளி பண்டிகையன்று மாலை 6 மணிமுதல் இரவு 12 மணி வரை ஒலி மாசு அளவு சென்னையில் குறைந்தபட்சமாக பெசன்ட் நகரில் 59.8 டிபி(ஏ), அதிகபட்சமாக நுங்கம்பாக்கத்தில் 78.7 டிபி(ஏ) ஆக இருந்தது. தமிழக அளவில் ஓசூரில் 91.5 டிபி(ஏ) அதிகபட்சமாகவும், நாகர்கோவில் ஸ்காட் கல்லூரியில் 57.3 டிபி(ஏ) குறைந்தபட்சமாகவும் ஒலி மாசு அளவு பதிவாகியுள்ளது.

தீபாவளி அன்று கண்டறியப்பட்ட ஒலி மாசு அளவுகள், வரையறுக்கப்பட்ட தேசிய சுற்றுப்புற ஒலி மாசின் அளவுகளைவிட அதிகமாக உள்ளது. அதேநேரம், கடந்தஆண்டு வளசரவாக்கத்தில் அதிகபட்சமாக காற்று மாசு குறியீடு 365-ஆக இருந்தது. தற்போது அதன் அளவு வெகுவாக குறைந்துள்ளது. தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள், பொதுமக்களின் ஒத்துழைப்பு மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரங்களால் காற்றின் மாசு வெகுவாகக் குறைந்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE