ராமேசுவரம்: புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்திலிருந்து கடலுக்குச் சென்ற விசைப்படகை நெடுந்தீவு அருகே அக். 9-ம் தேதி சிறைபிடித்த இலங்கை கடற்படையினர், படகில் இருந்த கே.ரமேஷ் (27), ஆர்.ஜானகிராமன் (27), டி.கிருஷ்ணன் (68), குமார் (40), உ.ரமேஷ் (51), ராஜ் (55) ஆகியோரை கைது செய்தனர்.
இது தொடர்பான வழக்கில், விசைப்படகு ஓட்டுநர் கே.ரமேஷுக்கு இலங்கை பணத்தில் ரூ.40 லட்சம் அபராதம் (இந்திய மதிப்பில் ரூ11,50,000) விதிக்கப்பட்டது. அபராதத்தை கட்டத் தவறினால் 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. மற்ற 5 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். பின்னர், விடுவிக்கப்பட்ட 5 மீனவர்களும் கொழும்பு விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு நேற்று முன்தினம் இரவு சென்னை வந்தடைந்தனர். பின்னர், அவர்கள் தனி வாகனத்தில் புதுக்கோட்டை மாவட்டத்துக்கு அழைத்து வரப்பட்டனர்.