ஸ்ரீவில்லிபுத்தூர் ராக்காச்சி அம்மன் கோயிலில் கட்டாற்று வெள்ளத்தில் சிக்கித் தவித்த 150 பேர் மீட்பு

By அ.கோபாலகிருஷ்ணன்

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள ராக்காச்சி அம்மன் கோயிலில் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கித் தவித்த 150 பேரை தீயணைப்புத்துறையினர் மீட்டனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் ராக்காச்சி அம்மன் கோயில் உள்ளது. அப்பகுதியில் ராக்காச்சி அம்மன் கோயில் ஆறு, அருவி ஆகியவற்றில் ஆண்டு முழுவதும் தண்ணீர் வருவதால் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் தினசரி சுவாமி தரிசனம் செய்வதற்கும் குளிப்பதற்கும் வருகின்றனர். தீபாவளி விடுமுறை என்பதால் வெள்ளிக்கிழமை ராக்காச்சி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்கும், ஆற்றில் குளிப்பதற்கும் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டனர்.

மாலை நேரத்தில் வனப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக ராக்காச்சி அம்மன் கோயில் ஆற்றில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் கோயிலில் இருந்தவர்கள் ஆற்றைக் கடக்க முடியாமல் சிக்கித் தவித்தனர். இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மம்சாபுரம் - ராக்காச்சி அம்மன் கோயில் சாலையில் அத்தி துண்டு ஓடையில் உயர் மட்ட பாலம் கட்டுமானப் பணி நடைபெறும் நிலையில் தற்காலிக தரைப் பாலத்தை கடந்த வாரம் பெய்த கன மழையில் காட்டாற்று வெள்ளம் அடித்துச் சென்றதால், வாகனம் வரமுடியாது என்பதால் ராஜபாளையம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர். ராஜபாளையம் தீயணைப்பு துறையினர் வந்து வெள்ளத்தில் சிக்கி இருந்த 150 பேரை கயிறு கட்டி மீட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE