கோவை மாநகரில் குவிந்த 75 டன் பட்டாசுக் கழிவுகள் - அகற்றும் பணி தீவிரம்

By டி.ஜி.ரகுபதி

கோவை: கோவை மாநகரில் வழக்கமான குப்பையுடன் 75 டன் பட்டாசுக் கழிவுகள் இன்று (நவ.1) குவிந்தன. இவற்றை அகற்றும் பணியில் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவை மாநகராட்சியின் 100 வார்டுகளில் இருந்து தினமும் சராசரியாக 950 முதல் 1,100 டன் வரை குப்பை சேகரிக்கப்படுகிறது. மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் மூலம் வீடு வீடாகச் சென்றும், சாலையோரம் கொட்டப்பட்டு இருக்கும் இடத்தில் இருந்தும் இவை சேகரிக்கப்படுகிறது. இந்நிலையில், தீபாவளிப் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. பண்டிகையையொட்டி, பொதுமக்கள் புத்தாடைகள் அணிந்து பட்டாசுகளை வெடித்து பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடினா். பண்டிகை தினத்தன்று விடுமுறை என்பதால் நேற்று தூய்மைப் பணியாளர்கள் மூலம் குப்பை சேகரிக்கப்படவில்லை.

அதனால் அன்று அகற்றப்பட வேண்டிய குப்பை கழிவுகள் அகற்றப்படாமல் சாலைகளில் தேங்கின. அன்றைய தினம் தூய்மைப் பணியாளர்கள் வராததால் பொதுமக்கள் தங்களது வீடுகளில் சேகரமான குப்பையை சாலைகளில் கொட்டிச் சென்றனர். அதேபோல், அன்றைய தினம் பொதுமக்கள் வெடிக்கப்பட்ட பட்டாசுக் கழிவுகளும் சாலைகளில் தேங்கின. வழக்கமான குப்பை, பட்டாசுக் கழிவுகள் ஆகியவை தேங்கியதால் எந்த சாலையை பார்த்தாலும் இன்று (நவ.1) குப்பையாக காணப்பட்டன. மாநகரின் பெரும் சதவீத பகுதிகளில் சாலைகளில் இருந்த குப்பைத் தொட்டிகள் அகற்றப்பட்டு விட்டன.

இதனால் பல்வேறு சாலையோர திறந்தவெளி இடங்கள் குப்பைத் தொட்டிகளாக மாறின. மூட்டை மூட்டைகளாக குப்பைகள் சாலையோர திறந்தவெளிப் பகுதிகளில் கடந்த இரு நாட்களாக தேங்கிக் கிடக்கிறது. கம்பி மத்தாப்பு குச்சிகள், பட்டாசு அட்டைப் பெட்டிகள், இனிப்புகள் வைத்திருந்த அட்டைப் பெட்டிகள், இலை, உணவுக் கழிவுகள், பூக் கழிவுகள், பழக் கழிவுகள் உள்ளிட்டவை தேங்கிக் கிடந்தன. பண்டிகை தினம் முடிந்து இவ்வாறு சாலைகளில் காணப்படும் குப்பை கழிவுகளை அகற்றும் பணியில் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் இன்று (நவ.1) ஈடுபட்டனர்.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் கூறும்போது, ”மாநகராட்சிப் பகுதிகளில் வழக்கமான அளவு குப்பையுடன், பட்டாசுக் கழிவுகள் மட்டும் 75 டன் கூடுதலாக தேங்கியது. பட்டாசுக் கழிகள் மற்றும் வழக்கமான தேங்கும் குப்பை ஆகியவற்றை அகற்றும் பணியில் இன்று (நவ.1) மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் இரவு, பகலாக மேற்கொண்டு வருகின்றனர். 50 சதவீத பணியாளர்கள், குப்பை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நாளைக்குள் (நவ.2) தேங்கிக் காணப்படும் குப்பை அனைத்தும் அகற்றப்பட்டு விடும்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE