நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. பேச்சிப்பாறை அணைக்கு 404 கனஅடி தண்ணீர் உள்வரத்தாக வரும் நிலையில் நீர்மட்டம் 42.71 அடியாக உள்ளது. அணையில் இருந்து 506 கனஅடி தண்ணீர் மதகு வழியாகவும், 492 கனஅடி தண்ணீர் உபரியாகவும் வெளியேறி வருகிறது.
இதைப்போல் சிற்றாறு அணை நீர்மட்டம் 14.04 அடியாக உள்ள நிலையில் அணையில் இருந்து 150 கனஅடி தண்ணீர் உபரியாக வெளியேற்றப்படுகிறது. பேச்சிப்பாறை, சிற்றாறில் இருந்து வெளியேறும் தண்ணீர் திற்பரப்பில் மழை நீருடன் கலந்து ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் இன்று 7வது நாளாக திற்பரப்பில் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வந்துள்ள நிலையில் திற்பரப்பு அருவிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தடையால் கரையில் நின்றவாறு ஏமாற்றத்துடன் பார்த்து செல்கின்றனர். பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 67.16 அடியாக உள்ள நிலையில் அணைக்கு 422 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 510 கனஅடி தண்ணீர் வெளியேறுகிறது.