மேட்டுப்பாளையம்: கோவையில் மழை தொடர்ந்து இடைவெளி விட்டு விட்டு, மழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக, மேட்டுப்பாளையம் அருகே, மரம் கார் மீது வேரோடு சரிந்து விழுந்தது.
கோவை மாவட்டத்தில் நடப்பு மாத தொடக்கத்தில் இருந்து, சில நாட்கள் இடைவெளி விட்டு விட்டு, தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தொடக்கத்தில் சாதாரணமாக தொடங்கினாலும், சில நிமிடங்களில் கனமழையாக பெய்து விடுகிறது. அதன்படி, தீபாவளிப் பண்டிகை தினமான நேற்று (அக்.31) இரவு 8 மணியளவில் மழை பெய்யத் தொடங்கியது.
தொடக்கத்தில் சாரல் மழையாக தொடங்கினாலும், பின்னர், கனமழையாக வெளுத்து வாங்கியது. சுமார் ஒரு மணி நேரத்துக்கு பின்னர், மழையின் தாக்கம் குறைந்தது. அதன் பின்னர், நள்ளிரவு முதல் இன்று (நவ.1) விடியும் வரை சாரல் மழையாக தூறிக் கொண்டிருந்தது.
இன்று அதிகாலை மழை நின்றது. அதன் பின்னர், இன்று மதியம் சிறிது நேரம் மழை பெய்து, நேற்று இரவு பெய்த கனமழையால் நகரின் சாலையோர தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது. பாதாள சாக்கடை திட்டப்பணி மற்றும் குடிநீர் குழாய் பதிப்புப் பணிக்காக தோண்டப்பட்ட சாலைகள் மழையால் சேறும் சகதியுமாக மாறின.
» தாம்பரம் மாநகராட்சியில் 29 டன் பட்டாசு குப்பைகள் அகற்றம்
» திருவண்ணாமலையில் குவியும் பக்தர்கள்: கோயில் மாட வீதியில் போக்குவரத்து பாதிப்பு
அதேபோல், மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை பெய்தது. இதனால் இப்பகுதிகளிலும் சாலையோர தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கிக் காணப்பட்டது. இச்சூழலில், மேட்டுப்பாளையத்தில் இருந்து அன்னூர் செல்லும் நெடுஞ்சாலையில், நடூர் பாலம் அருகே சாலையோரம் இருந்த பெரிய மேபிளவர் மரம் ஒன்று நேற்று மதியம் வேரோடு சாய்ந்து சாலையில் விழுந்தது.
அப்போது அவ்வழியாக கோவை சிங்காநல்லூரில் இருந்து மேட்டுப்பாளையத்தில் உள்ள நண்பரை காண கணவன், மனைவி மற்றும் குழந்தையுடன் மூவர் காரில் வந்து கொண்டிருந்தனர். இந்த காரின் மீது மரம் விழுந்தது. மரத்தின் அடியில் கார் சிக்கிக் கொண்டது. இதில் மரத்தின் கிளைகள் காரின் முன்பக்கம் விழுந்த நிலையில் காரில் இருந்த தம்பதியர், குழந்தை ஆகியோர் உடனடியாக காரை விட்டு வெளியேறினர்.
இதில் காரின் முன்பக்கம் சேதமடைந்தது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்தும் தடைபட்டது. தகவல் அறிந்து தீயணைப்புத்துறையினர் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று சிறிது நேரம் போராடி இயந்திரங்கள் மூலம் மரத்தின் கிளைகளை வெட்டி அகற்றினர். அதைத் தொடர்ந்து போக்குவரத்து சீர் செய்யப்பட்டு வாகனப் போக்குவரத்து தொடங்கியது.