நாகர்கோவில்: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 4 நாள் தொடர் விடுமுறையால் கன்னியாகுமரியில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.
தீபாவளி பண்டிகை வியாழக்கிழமை வந்ததை தொடர்ந்து அதற்கு முந்தைய தினம் பள்ளிகளுக்கு அரை நாள் விடுமுறையும், தீபாவளிக்கு அடுத்த தினமான இன்று விடுமுறையும் வழங்கப்பட்டது. மேலும் சனி, ஞாயிறு விடுமுறையுடன் சேர்த்து நான்கு நாள் தொடர் விடுமுறை என்பதால் தீபாவளி கொண்டாட்டத்துடன் குடும்பத்துடன் மக்கள் சுற்றுலா தலங்களுக்கு சென்று உற்சாகமாக பொழுதை கழித்தனர்.
கன்னியாகுமரியில் தீபாவளியன்று தமிழகம், கேரளாவில் பணியாற்றும் வடமாநில இளைஞர்கள் ஏராளமானோர் திரண்டிருந்தனர். குறிப்பாக கோவை, திருப்பூர், சென்னை, மதுரை, திருச்சி போன்ற இடங்களில் பணியாற்றும் வடமாநிலத்தவர் விடுமுறையை உற்சாகமாக களிக்கும் வகையில் கன்னியாகுமரியில் குவிந்திருந்தனர். இதனால் கன்னியாகுமரியில் தீபாவளியன்று சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
» திருவண்ணாமலையில் குவியும் பக்தர்கள்: கோயில் மாட வீதியில் போக்குவரத்து பாதிப்பு
» தமிழர்களுக்கு என்று ஒரு தனி மாநிலம்: தமிழ்நாடு தினத்துக்கு விஜய் வாழ்த்து!
இதைப்போல் இன்று சொந்த ஊர்களுக்கு தீபாவளி கொண்டாட வந்திருந்த மக்கள் கன்னியாகுமரி, மற்றும் பிற சுற்றுலா மையங்களில் குவிந்தனர். இதனால் அதிகாலையில் முக்கடல் சங்கமம் பகுதியில் சூரிய உதயம் பார்க்க ஏராளமானோர் திரண்டனர். அதை தொடர்ந்து கடலில் படகு சவாரி செய்து விவேகானந்தர் மண்டபத்திற்கு சென்று வந்தனர்.
இதனால் கன்னியாகுமரியில் எங்கு பார்த்தாலும் சுற்றுலாப் பயணிகள் கூட்டமாக காணப்பட்டது. கன்னியாகுமரியில் உள்ள தங்கும் விடுதிகள் நிரம்பி வழிந்தன. சனி, ஞாயிறு நாட்களில் மேலும் கூட்டம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சாலைகளில் வாகன நெருக்கடியால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.