திருவண்ணாமலையில் குவியும் பக்தர்கள்: கோயில் மாட வீதியில் போக்குவரத்து பாதிப்பு

By இரா.தினேஷ்குமார்

திருவண்ணாமலை: தீபாவளி தொடர் விடுமுறையால், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வருகை தந்த பக்தர்களின் வாகனங்களால் மாட வீதியில் இன்று (நவ.1) கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தீபாவளி தொடர் விடுமுறையால், பஞ்சபூத திருத்தலங்களில் அக்னி திருத்தலமான, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு பக்தர்களின் வருகை 3-வது நாளாக இன்றும் (நவ.1) தொடர்ந்தது. தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் இருந்தும், சுவாமி தரிசனம் மற்றும் கிரிவலம் செல்ல பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். இவர்களில் ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநில பக்தர்களின் வருகை கூடுதலாக உள்ளன.

அண்ணாமலையார் கோயில் ராஜகோபுரம் மற்றும் அம்மணி அம்மன் கோபுரம் வழியாக பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். பொது தரிசன பாதையில் சுமார் 2 மணி நேரமும், ஐம்பது ரூபாய் கட்டண தரிசன பாதையில் ஒரு மணி நேரத்துக்கும் கூடுதலாக நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் அவர்கள், உண்ணாமுலை அம்மன் மற்றும் கால பைரவர் சந்நிதிகளில் வழிபட்டனர். முன்னதாக, விநாயகர் மற்றும் வள்ளி தெய்வானை சமேத முருகர் உள்ளிட்ட சுவாமிகளை தரிசித்தனர்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள்

தமிழகத்தின் பிற மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு பொது போக்குவரத்து மட்டுமின்றி கார், வேன் உள்ளிட்ட வாகனங்களில் பக்தர்கள் வருகை தந்தனர். இவர்களது வாகனங்கள் வட மற்றும் தென் ஒத்தவாடை தெரு, பே கோபுரத் தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டன. இதனால் தேரடி வீதி, பெரியத் தெரு, பே கோபுரத் தெரு உள்ளிட்ட மாட வீதி, வட மற்றும் தென் ஒத்தவாடை தெருவில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டனர். வழக்கமான போக்குவரத்தில் மாற்றம் செய்து, நீண்ட போராட்டத்துக்கு பிறகு வாகன போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தினர். இதனால் மாட வீதி மற்றும் சுற்று பகுதியில் வசிக்கும் உள்ளூர் மக்கள் அவதிப்பட்டனர்.

இதுகுறித்து அவர்கள் கூறும்போது, “அண்ணாமலையார் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய பவுர்ணமி மட்டுமின்றி விடுமுறை நாட்களிலும் பல்லாயிரம் பக்தர்கள் வருகின்றனர். கடந்த 2 ஆண்டுகளாக கார், வேன் உள்ளிட்ட வாகனங்களில் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால், அண்ணாமலையார் கோயிலை சுற்றி உள்ள வீதிகளில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படுகிறது. இதற்கு தீர்வு காண, திருவண்ணாமலை மாநகரில் வாகன நிறுத்தும் இடத்தை விரைவாக அமைக்க தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE