தொடர் விடுமுறை: கும்பக்கரை அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

By என்.கணேஷ்ராஜ்

பெரியகுளம்: தீபாவளி தொடர் விடுமுறையால் கும்பக்கரை அருவிக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் இருந்து 8 கிமீ.தொலைவில் கும்பக்கரை அருவி அமைந்துள்ளது. கொடைக்கானல், வட்டக்கானல், வெள்ளகெவி, பாம்பார்புரம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்யும் மழைநீர் இங்கு அருவியாக கொட்டுகிறது.

நீர்வரத்துக்கு ஏற்ப அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு இப்பகுதியில் கனமழை பெய்தது. இதனால் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. தொடர்ந்து மழை குறைந்து நீர்வரத்து சீராகியதால் ஒரு வாரமாக தடை நீக்கப்பட்டுள்ளது.

இதனால் சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் அருவியில் குதூகலமாக குளித்து மகிழ்கின்றனர். இந்நிலையில் தீபாவளி தொடர் விடுமுறை தொடங்கியதால் கூட்டம் அதிகரித்துள்ளது. வெளியூரில் இருந்து வந்த சுற்றுலாப் பயணிகள் பலரும் ஆர்வமுடன் குளித்து வருகின்றனர்.

இதுகுறித்து இவர்கள் கூறுகையில், குற்றாலம் போன்ற இடங்களில் குறைவான நேரமே குளிக்க முடிகிறது. ஆனால் இங்கு அந்தளவுக்கு கூட்டம் இல்லாததால் கூடுதல் நேரம்குளிக்க முடிகிறது. மேலும் பாதுகாப்பாக இருப்பதால் பெண்கள், குழந்தைகளும் நிம்மதியாக குளிக்கின்றனர் என்றனர்.

வனத்துறையினர் கூறுகையில், காலை 8 முதல் மாலை 4 மணி வரை அருவியில் குளிக்கலாம். நுழைவுக் கட்டணம் ரூ.30. தீபாவளி தொடர் விடுமுறை என்பதால் கூட்டம் அதிகரித்துள்ளது என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE