அரசியல் கட்சித் தலைவர்கள் தீபாவளி வாழ்த்து!

By KU BUREAU

மக்கள் இன்று உற்சாகமாக தீபாவளி பண்டிகையைக் கொண்டாடி வரும் நிலையில், தீப ஒளி திருநாளை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தனது வாழ்த்துச் செய்தியில், “மக்கள் அனைவரது வாழ்விலும் துன்பங்கள் நீங்கி, இன்பங்கள் பெருகட்டும்; இன்று பெருகும் இன்பம் அனைவரிடமும் என்றென்றும் நிலைத்திருக்கட்டும். மக்கள் அனைவரும் எல்லா வளமும், நலமும் பெற்று இன்பமுடன் வாழ்ந்திட வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம்:

தீபங்களின் வரிசை என்றழைக்கப்படும் தீபாவளித் திருநாளைஉற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும் கொண்டாடும் எனது அருமை தமிழக மக்களுக்கு நெஞ்சம் நிறைந்த தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகளை மட்டற்ற மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை:

மக்களை மதரீதியாக பிளவுபடுத்தி, அரசியல் ஆதாயம் தேடுகிற வகையில் ஆட்சி நடத்தி வருகிற பா.ஜ விற்கு மக்கள் பாடம் புகட்டும் நிலை உருவாகி வருகிறது. தீமையை வதம் செய்த தீபாவளித் திருநாளில் வகுப்புவாத நச்சு சக்திகள் வீழ்த்தப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் வகையில் தீபாவளி திருநாளை கொண்டாடுவோம்.

மத்திய இணையமைச்சர் எல்.முருகன்:

இந்துக்கள் மட்டுமல்லாமல் சமணர்கள், சீக்கியர்களும் உலகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடி மகிழ்கின்றனர். பாரத தேசமும் முழுவதும் கொண்டாடப்படும் இவ்விழா, அதர்மத்தின் மீது தர்மத்தின் வெற்றியையும், இருளின் மிது ஒளியின் வெற்றியையும் குறிக்கிறது.

தமிழிசை சௌந்தரராஜன் (பாஜக):

சாதி மத பேதங்களைக் கடந்து கொண்டாடப்படும் இந்த தீபாவளித் திருநாள் அனைவரது வாழ்விலும் ஒளிமயமான எதிர்காலத்தையும் மகிழ்ச்சியையும் கொண்டுவர வாழ்த்துகிறேன்.

காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர்:

இந்நாளில் ஏழை, எளியோர் மற்றும் வறுமைக் கோட்டிற்கும் கீழே வாழ்வோருக்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்து அவர்களையும் மகிழ்ச்சி அடையச் செய்திடவும் உறுதியேற்போம்.

தேமுதிக பொதுச்செயலாளார் பிரேமலதா விஜயகாந்த்:

தீபாவளி திருநாள் ஏழை மக்கள் தங்கள் வாழ்வில் இருளைப் போக்கி, ஒளியை ஏற்றும் தீப ஒளி திருநாளாக இதைப் போற்றுகிறார்கள். இந்த இனிய நாளில் தங்களின் துன்பங்கள் நீங்கி, செழிப்பான வாழ்வு வாழ வேண்டுகிறேன்.

பாமக நிறுவனர் ராமதாஸ்:

தமிழ்நாட்டின் பொறுப்புள்ள குடிமக்களாக இருளை பழித்துக் கொண்டு மட்டும் இருப்பதில் பயனில்லை; அதை அகற்றி ஒளியேற்ற வேண்டும். அந்த ஒளியால் சமூகநீதி, அமைதி, வளம், வளர்ச்சி, ஒற்றுமை, நல்லிணக்கம், சகோதரத்துவம், பன்முகத்தன்மை உள்ளிட்ட ஜொலிக்க வகை செய்யட்டும்.

பாமக தலைவர் அன்புமணி:

மக்களிடையே அன்பு, நட்பு, நல்லிணக்கம், சகோதரத்துவம் ஆகியவை மலர வேண்டும்; போட்டி, பொறாமை, பகைமை, வெறுப்பு போன்றவை விலக வேண்டும்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்:

இந்த தீபாவளித் திருநாள், அனைவரது வாழ்விலும் இருள் விலகி ஒளி பிறக்கும் நாளாகவும், தீமைகள் அகன்று நன்மைகள் பெருகும் நாளாகவும் அமையட்டும்.

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்:

இல்லமெங்கும் மகிழ்ச்சி உள்ளமெங்கும் மலர்ச்சி என இந்த ஒளிநாளில் அனைவர் மனதிலும் உற்சாகம் நிறைய வாழ்த்துகிறேன்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE