ஓசூர்: ஓசூர் அடுத்த பாகலூரில் ஏரிக்கரை மீது சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து ஏரியில் விழுந்ததில் நீரில் மூழ்கி 3 நண்பர்கள் உயிரிழந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை சேர்ந்த மகேஷ் மற்றும் இவரது நண்பர்கள் லிங்க்டோ, சின்னஎலசகிரியைச் சேர்ந்த யோகேஸ்வரன் ஆகிய 3 பேரும் தனியார் தொழிற்சாலையில் பணி செய்து வந்தனர். இந்நிலையில் நேற்று இரவு 3 பேரும் காரில் பாகலூர் சென்றனர். அப்போது வெங்கடராயபுரம் ஏரிக்கரையில் சென்றுக்கெண்டிருந்த போது, கார் கட்டுப்பாட்டை இழந்து ஏரியில் விழுந்தது.
இதில் 3 பேரும் காரிலிருந்து வெளியே வரமுடியாமல் நீரில் மூழ்கினர். இதனை பார்த்த அங்கிருந்த பொதுமக்கள் தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீஸாருக்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் கிரேன் மூலம் மகேஷ், லிங்க்டோ ஆகிய 2 பேரை காருடன் சடலமாக மீட்டனர்.
» தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இன்று கனமழை வாய்ப்பு
» ஒன்றிணைந்து செயல்படுவோம்: நடிகர் அஜித்துக்கு உதயநிதி ஸ்டாலின் அழைப்பு
மேலும் நீர் மூழ்கிய யோகேஸ்வரனை நீண்ட நேர தேடுதலுக்கு பின்னர் இன்று காலை சடலமாக மீட்டனர். பின்னர் 3 பேர் உடல்களையும் பாகலூர் போலீஸார் மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். நண்பர்கள் 3 பேர் உயிரிழந்தது குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.