அரசியல் பாதையில் எதை தேர்ந்தெடுக்கப் போகிறார் என்பதில் நடிகர் விஜய்க்கு தெளிவில்லை என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி விமர்சனம் செய்துள்ளது.
இதுகுறித்து, அக்கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: சிறந்த திரைப்படக் கலைஞராக வலம்வந்த விஜய், தற்போது அரசியலில் முதல் அடி எடுத்து வைத்துள்ளார். அரசியல் பாதை என்பது இரண்டு வகையானது. ஒன்று இடதுசாரி பாதை, மற்றொன்று வலதுசாரி பாதை. அவர் எந்தப் பாதையை தேர்ந்தெடுக்க உள்ளார் என்பது குறித்து, அவரது மாநாட்டு உரையில் தெளிவில்லை.
பிளவுவாத சக்திகளை எதிர்ப்பதாகக் கூறுகின்றார். அடுத்த கணம் திமுகவை குறிவைத்து பேசுகிறார். திமுகவை மட்டுமல்ல, திமுகவுடன் தோழமை கொண்ட கட்சிகளின் மீதும் மறைமுகமாக தாக்குதலை நடத்தியுள்ளார்.
பாஜக பாசிசம் எனில் நீங்கள் என்ன பாயாசமா? எனக் கூறியதன் மூலம் பாசிச அபாயத்தை அவர் உணர்ந்ததாகத் தெரியவில்லை. எது பேரபாயம்? அரசியல் அமைப்புச் சட்டத்தை நிராகரிப்பது, புறம்பாகச் செயல்படுவது அரசியலமைப்புச் சட்டத்தால் உருவாக்கப்பட்டுள்ள அமைப்புகளை சீர்குலைத்து, தனக்கு உட்பட்ட அமைப்பாகவும், தன் உத்தரவை நிறைவேற்றும் அமைப்பாகவும் மாற்றி, எதிர்க்கட்சிகளை பழிவாங்குவது, அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கியுள்ள சுயமாக சிந்திப்பது, பேசுவது, எழுதுவது என்ற ஜனநாயக உரிமையைப் பறித்து, மாற்று கருத்துடையோரை கொல்வது, மதச்சார்பின்மை கொள்கைக்கு மாறாக மதரீதியாக மக்களைப் பிளவுபடுத்தி தனது குறுகிய அரசியல் நோக்கத்தை நிறைவேற்றி வருவது போன்றவைதானே அபாயத்தின் உச்சம் என்பதனை உணர முடியவில்லையா?
» புதிய உச்சத்தில் தங்கம் விலை: பவுனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ.59,520-க்கு விற்பனை
» புதுவையில் முதல்வர் அறிவித்தும் தீபாவளிக்கு தரப்படாத மானிய விலை மளிகை பொருட்கள்: பெண்கள் முற்றுகை
சமத்துவம், சகோதரத்துவம், சமூகநீதி, சமூகநலத் திட்டங்கள் ஆகியனவற்றை செயல்படுத்துவதில், நிறைவேற்றுவதில் திமுக எங்கே தவறியுள்ளது என்பது குறித்து கூறினால் அது பரிசீலனைக்குரியது. அதைத் தவிர்த்து, பாஜக கூறும் கருத்தையே இவரும் திருப்பி கூறுவதால் என்ன பயன்? இதன்மூலம் பாசிச பாஜகவுக்கு விஜய் துணை போகின்றாரோ? என்ற ஐயத்தை உண்டாக்குகிறது.
நாங்களே அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்து முதல்வர் ஆவேன் என நாற்காலி ஆசையை வெளிப்படுத்தியவர், எங்களோடு சேர வந்தால் சேர்த்துக் கொள்வோம், அவர்களுக்கு அமைச்சரவையில் இடம் அளிப்போம் என்று கூறியிருப்பது அதிகாரத்தில் பங்கு என்ற தேன் தடவும் வேலையாகும்.
இதன்மூலம் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சிதையும் என்ற அவரது எதிர்பார்ப்பு என்பது பாசிச சக்திகள் தமிழகத்தில் கால் ஊன்ற மேற்கொள்ளப்படும் அரசியல் உத்தியாகும். இத்தகைய நயவஞ்சக நரித்தனத்துக்கு தமிழக மக்கள் ஒருபோதும் இரையாக மாட்டார்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்