புதுச்சேரி: புதுவை முதல்வர் ரங்கசாமி தீபாவளியை ஒட்டி மானிய விலையில் ஆயிரம் ரூபாய் மளிகை பொருட்கள் 500 ரூபாய்க்கு தருவதாக அறிவித்து இம்முறை தராததால் பெண்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். டெண்டர் எடுக்க யாரும் வராதது தான் காரணம் என அதிகாரிகள் விளக்கம் தந்தனர்.
புதுச்சேரி கான்ஃபெட் கூட்டுறவு நிறுவனம் மூலமாக ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மளிகை பொருட்களை 500 ரூபாய்க்கு மானிய விலையில் வழங்கப்படும் என்று புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்திருந்தார். ஆனால் தீபாவளிக்கு முன்தினமான இன்று வரை தரவில்லை. பொதுமக்கள் தினம்தோறும் கிராமப்புறங்களில் இருந்தும் நகர்ப்புறத்தை சேர்ந்த பெண்களும் ஏமாற்றத்துடன் வந்து திரும்பி சென்றதாக குறிப்பிட்டனர்.
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க நிர்வாகிகள் சத்தியா, முனியம்மாள், உமா சாந்தி உள்ளிட்ட பெண்கள் கான்ஃபெட் சிறப்பு அங்காடியை இன்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனை அடுத்து தன்வந்திரி நகர் காவல் துறையினர் வந்து அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். கான்ஃபெட் மேலாண் இயக்குனரை தொடர்பு கொண்டு கேட்டபோது, இந்த வருடம் மானிய விலை பொருட்கள் வழங்கப்படவில்லை. அரசு விடுத்திருந்த டெண்டர் அழைப்பினை யாரும் ஏற்க முன்வராததால் பொருட்கள் இந்த ஆண்டு வழங்க இயலாமல் போய் விட்டது என்று தெரிவித்தார். இதனை அடுத்து ஜனநாயக மாதர் சங்கத்தின் நிர்வாகிகள் இந்த வருடம் பொருட்கள் வழங்கப்படாது என்று அறிவிப்பு பலகை வைக்குமாறு கூறினர்.