தீபாவளிக்கான இலவச அரிசி, சர்க்கரை 75 % மக்களை சென்றடையவில்லை: புதுச்சேரி அதிமுக குற்றச்சாட்டு 

By அ.முன்னடியான்

புதுச்சேரி: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு இலவசமாக தருவதாக அறிவித்த 10 கிலோ அரிசி, 2 கிலோ சர்க்கரை 75 சதவீதம் மக்களைச் சென்றடையவில்லை என்று புதுச்சேரி அதிமுக குற்றம் சாட்டியுள்ளது.

இது குறித்து அக்கட்சியின் மாநித் தலைவர் அன்பழகன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: ''நடிகர் விஜய் புதிய கட்சி ஆரம்பித்து முதல் மாநாட்டில் பல்வேறு விதமான கருத்துக்களை தெரிவித்துள்ளார். அது அந்தக் கட்சியின் நிலைபாடு என்றும், அதற்கெல்லாம் கருத்துக் கூற முடியாது என்றும் பெருந்தன்மையாக எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெளிவுபடுத்தி உள்ளார்.

விஜய், 'தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சி என்று கூறிக்கொண்டு முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தின் ஊழல் ஆட்சி நடைபெறுவதாக' அதிமுகவின் கருத்தை பின்பற்றி காட்டமாக பேசினார். அதற்கு நேரடியாக பதிலளிக்க வேண்டிய ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஆகிய இருவரும் நடிகர் விஜய்யின் பகிரங்க குற்றச்சாட்டுக்கு பதில் கூறக்கூட திராணி இல்லாமல் உள்ளனர். மாறாக தன்னுடைய கூட்டணி கட்சி தலைவர்களின் முதுகுக்குப் பின்னால் ஒளிந்துகொண்டு அவர்களை விட்டு ஏதேதோ பதில் கூறிக்கொண்டு இருக்கிறார்.

திமுகவில் கூட்டணியில் இருப்பவர்கள் தலைவர்களாக ஏற்றுக் கொண்டுள்ள மறைந்த தலைவர்களைப் பற்றி புகழ்ந்து விஜய் பேசும் போது, திமுக கூட்டணி கட்சி தலைவர்களில் பலர் திமுகவின் கிளை கழக தலைவர்கள் போன்று விஜய்க்கு எதிர்கருத்தை தெரிவித்து வருவது வியப்பாக உள்ளது.இதில் அந்தந்த கட்சிகளைச் சேர்ந்த தொண்டர்கள் தங்களது தலைவர்களின் சந்தர்ப்பவாத அரசியலை சீர்தூக்கிப் பார்த்து சாதி, மத பேதமில்லாமல் அரசியல் நடத்தும் எங்கள் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவில் சேர வேண்டும்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி அரசால் இலவசம் என அறிவிக்கப்பட்ட 10 கிலோ அரிசி, 2 கிலோ சர்க்கரை இன்று வரை 75 சதவீதமான மக்களுக்கு சென்றடையவில்லை. அதேபோல், ரூ.500 மானிய விலையில் 10 பொருட்கள் அடங்கிய தீபாவளி தொகுப்பு பொருட்கள் வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்தார். ஆனால், அதுவும் கிடைக்கவில்லை. இவ்விரண்டையும் தேடி மக்கள் ஆங்காங்கே அலையாய் அலைந்து கொண்டுள்ளனர்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசால் அறிவிக்கப்பட்ட உணவு பொருட்கள் முதன் முதலாக வழங்குவதில் பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டுள்ளது. எனவே அரசு போலி கவுரவம் பார்க்காமல் 10 கிலோ இலவச அரிசிக்கு ரூ.500-ம், 2 கிலோ சர்க்கரைக்கு ரூ.100-ம், 10 உணவு பொருட்களுக்கு மானியமாக ரூ.500-ம் என மொத்தம் ரூ.1,100-ஐ அவரவர் வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும்.'' இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பேட்டியின் போது மாநில அதிமுக இணைச் செயலாளர் திருநாவுக்கரசு, மாநிலப் பொருளாளர் ரவி பாண்டுரங்கன், புதுச்சேரி நகரச் செயலாளர் அன்பழகன், மாநில துணைச் செயலாளர் நாகமணி, மாநில அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் பாப்புசாமி ஆகியோர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE