காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் காவல்துறை பயன்பாட்டில் உள்ள துப்பாக்கி ரகங்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டன.
தமிழக காவல்துறையில் பயன்படுத்தப்படும் துப்பாக்கிகள் மற்றும் போராட்ட நேரங்களில் ஏற்படும் நிகழ்வுகளை தவிர்க்க பயன்படும் உபகரணங்களை பொதுமக்கள், இளைஞர்கள் அறிந்து கொள்ளும் வகையில் மாவட்டம் தோறும் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் அருகே காட்சிக்கு வைக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் அருகே மாவட்ட காவல்துறை சார்பில் 25 வகையான துப்பாக்கி ரகங்கள் மற்றும் பயன்பாட்டில் உள்ள உபகரணங்கள் ஆகியவை காட்சிக்கு வைக்கப்பட்டன.
இதனை பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் பார்வையிட்டனர். இந்த கண்காட்சியில் ஏ.கே.47, எஸ்.எல்.ஆர், பிஸ்டல், ரிவால்வர் உள்ளிட்ட துப்பாக்கி ரகங்களும், போராட்ட காலங்களில் வன்முறைகளை தவிர்க்க வாகனங்களில் பொருத்தப்படும் நீர் தெளிப்பு உபகரணங்கள் உள்ளிட்டவையும் காட்சிப்படுத்தப்பட்டன. இந்தக் கண்காட்சி சுமார் 2 மணி நேரம் மட்டுமே நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இந்த ஆயுதங்கள் பாதுகாப்பு அறைக்கு கொண்டு செல்லப்பட்டன.