மலேசியா சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்குச் செல்லும் 15 அடி உயர நாச்சியார் கோயில் வெண்கல வேல்

By சி.எஸ். ஆறுமுகம்

கும்பகோணம்: கும்பகோணம் வட்டம், நாச்சியார்கோவிலில் வடிவமைக்கப்பட்ட 15 அடி உயரமுள்ள வெண்கலத்தாl ஆன வேல் மலேசியாவில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.

நாச்சியார்கோவில், கம்மாளர் தெருவைச் சேர்ந்தவர் முத்து மகன் விக்னேஷ்(43). இவர் குத்துவிளக்கு உள்ளிட்ட பல்வேறு பொருட்களை பல தலைமுறைகளாக வடிவமைத்து வருகின்றார். இந்த நிலையில் கடந்தாண்டு மலேசிய நாட்டின் கிலாங்கில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பிரதிஷ்டை செய்வதற்காக வேல் ஒன்றை வடிவமைக்க அந்தக் கோயில் நிர்வாகம் சார்பில் விம்கேஷுக்கு ஆர்டர் தரப்பட்டது.

அதன்படி, 15 அடி உயரத்தில், மயில் உருவம் பொறித்த வெண்கலத்தாலான வேலை விக்னேஷ் வடிவமைத்துள்ளார். இந்த வேலானது அடுத்த மாதம் மலேசியாவில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு அனுப்பிவைக்கப்படுகிறது.

இது தொடர்பாக நம்மிடம் பேசிய விக்னேஷ், “மலேசிய நாட்டின் கிலாங் நகரில் சுப்பிரமணிய சுவாமி கோயில் மலேசிய தமிழர்களின் நிர்வாகத்தின் கீழ் உள்ளது. இந்தக் கோயிலுக்கு அடுத்தாண்டு பிப்ரவரியில் கும்பாபிஷேகம் நடைபெற்ற உள்ளது. அதையொட்டி அங்கு பிரம்மாண்டமான வகையில் முருகனுக்கு உகந்த வேலை பிரதிஷ்டை செய்ய கோயில் நிர்வாகத்தினர் முடிவு செய்தனர்.

அதன்படி, 15 அடி உயரத்தில் மயில் உருவம் பொறித்த வெண்கலத்தாலான வேல் செய்ய எங்களுக்கு ஆர்டர் தரப்பட்டது. அதற்காக கடந்த ஓராண்டாக அந்த வேல் வடிவமைக்கப்பட்டு, தற்போது தயார் நிலையில் உள்ளது. இந்த வேல் அடுத்த மாதம் முதல் வாரத்தில் மலேசியாவுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE