மதுரையில் ஆதரவற்ற முதியோர்களுடன் தீபாவளி கொண்டாடிய ஐகோர்ட் தலைமை நீதிபதி

By கி.மகாராஜன்

மதுரை: மதுரையில் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் ஆதரவற்ற முதியோர்களுடன் தீபாவளியைக் கொண்டாடி மகிழ்ந்தார்.

மதுரை உத்தங்குடி ரோஜாவனம் முதியோர் இல்லத்தில் உயர் நீதிமன்றம் மதுரை வழக்கறிஞர் சங்கம் சார்பில் தீபாவளி கொண்டாட்டம் நேற்று மாலை நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் சுரேஷ் தலைமை வாகித்தார், செயலாளர் ஆர்.வெங்கடேசன் முன்னிலை வகித்தார்.

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், உயர் நீதிமன்ற மதுரை அமர்வு நிர்வாக நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் ஆகியோர் முதியோர்களுக்கு இனிப்பு மற்றும் நல திட்ட உதவிகள் வழங்கி அவர்களுடன் சேர்ந்து பட்டாசு வெடித்து தீபாவளியை கொண்டாடினார்கள்.

பின்னர் தலைமை நீதிபதி ஸ்ரீராம் பேசும் போது, “முதியோர்கள் வரவேற்பும், அவர்கள் காட்டிய அன்பும் என் மனதை நெகிழச் செய்தது. முதியோர்கள் தங்கள் வாழ்நாளில் மறுபிறவி எடுத்த குழந்தைகள் ஆவார்கள். அவர்கள் நடத்திய கூட்டு பிரார்த்தனை நாட்டு மக்கள் அனைவரையும் நலமோடு வாழச் செய்யும். தமிழ் நாட்டில் தீபாவளியை மனைவி மற்றும் முதியோர்களுடன் சேர்ந்து கொண்டாடுவது என் வாழ்நாளில் மறக்க முடியாத சந்தோஷமான அனுபவம்” என்றார்.

வழக்கறிஞர் முத்துக்குமார், எம்பிஏ துணை தலைவர்கள் சுபபிரியா, ஷேக்அப்துல்லா, உதவி செயலாளர். ஜெயராணி, நட்சத்திரம் நண்பர்கள் நிறுவனர் ஸ்டார் குரு, தமிழ் சினிமா நடிகர்கள் சங்க பொதுச் செயலாளர். சினி வினோத், ரோஜாவானம் முதியோர் இல்லம் மேலாளர் ராமன் மற்றும் ஏராளமான வழக்கறிஞர்கள் இந்தக் கொண்டாட்டத்தில் கலந்துக் கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE