சென்னை: தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகத் தொழிலாளர்களுக்கு 20 சதவீத போன்ஸ் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இலங்கையிலிருந்து தாயகம் திரும்பியவர்களுக்கு மறுவாழ்வு ஏற்படுத்தும் வகையில், நீலகிரி மாவட்டம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் வேலைவாய்ப்பு அளிப்பதை நோக்கமாகக் கொண்டு தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகம் (TANTEA) 1976-ல் நிறுவப்பட்டது.
இந்நிறுவனத்தில் நிலவும் கடும் நிதி நெருக்கடிக்கிடையிலும் 1,093 ஓய்வுபெற்ற தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகத் தொழிலாளர்களுக்கு பணிக்கொடை மற்றும் ஓய்வூதியப் பணப்பலன்கள் வழங்க ரூ.29.38 கோடி ஒதுக்கப்பட்டது.
ஓய்வுபெற்ற தேயிலை தோட்டக் கழகத் தொழிலாளர்கள் வசிக்க ஏதுவாக, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடிக் குடியிருப்புக்கான பயனாளிகளின் பங்களிப்புக்கு ரூ.13.46 கோடி வழங்கப்பட்டது. தேயிலை தோட்டக் கழகத் தொழிலாளர்களின் தினக்கூலியை ரூ.438-ஆக உயர்த்தி ஆணையிட்டப்பட்டது.
» ஓபிஎஸ் மீதான சொத்து குவிப்பு வழக்கை 2025 ஜூன் இறுதிக்குள் விசாரித்து முடிக்க ஐகோர்ட் உத்தரவு
» பாஜக எதிர்ப்பில் விஜய் உறுதியாக இல்லை: திருமாவளவன் விமர்சனம்
இந்த ஆண்டு போனஸ் வழங்க அரசு வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டுதல்கள்படி, நஷ்டத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு தேயிலை தோட்டக் கழகப் பணியாளர்கள் 10 சதவீத போனஸ் மட்டுமே பெறத் தகுதியானவர்கள். வனத் துறை கட்டுப்பாட்டில் இயங்கி வரும் அரசு ரப்பர் கழகம் மற்றும் தமிழ்நாடு வனத் தோட்டக் கழகப் பணியாளர்களுக்கு 20 சதவீத போனஸ் வழங்கப்படுகிறது.
வனத் துறையின் நிர்வாகக் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து நிறுவனப் பணியாளர்களுக்கும் ஒரே அளவில் 20 சதவீத போனஸ் வழங்குமாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார். அதன்படி, தமிழ்நாடு தேயிலை தோட்டக் கழகப் பணியாளர்களுக்கும் ரூ.5.72 கோடி செலவில், 20 சதவீத போனஸ் வழங்கப்படும். இதனால் 3,939 பணியாளர்கள் பயன் பெறுவார்கள் என்று தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது