திருவண்ணாமலை: பாஜக எதிர்ப்பில் தவெக தலைவர் விஜய் உறுதியாக இல்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறினார்.
திருவண்ணாமலையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: தமிழக வெற்றிக் கழக முதல் மாநாட்டில், அக்கட்சியின் தலைவரிடம் மக்கள் நிறைய எதிர்பார்த்தனர். ஆனால், தனக்கு எதிரான விமர்சனங்கள் மற்றும் இனிமேல் எழக்கூடிய விமர்சனங்களுக்கு பதில் சொல்வதிலேயே விஜய் அதிக நேரம் எடுத்துக் கொண்டார். நண்பர்கள் யார் என அடையாளம் காட்டுவதைவிட, எதிரிகள் யார் என அடையாளம் காட்டுவதிலேயே ஆர்வம் காட்டினார். பிளவுவாத சக்திகள் முதலாவது எதிரி என்றும், ஊழல் சக்திகள் 2-வது எதிரி என்றும் குறிப்பிட்டுள்ளார்.ஆனால், பிளவுவாத சக்திகளை வெளிப்படையாகக் கூறவில்லை. குறிப்பிட்ட கட்சி, அமைப்பு என அடையாளப்படுத்தவில்லை. அதுவும் மேம்போக்காகவே பேசினார். பிறப்பொக்கும் எல்லா உயிருக்கும் என்று கூறியபோது, சமத்துவ அரசியலை முன்மொழிகிறார் என்ற மகிழ்ச்சி ஏற்பட்டது.
ஆனால், பெரும்பான்மை-சிறுபான்மை என பேசும் அரசியலில் உடன்பாடு இல்லை என்றபோது, பெரும்பான்மை வாதத்தைப் பேசுகிறவர்கள் யார் என அடையாளப்படுத்தாதது ஏன்? பாசிச எதிர்ப்பை கிண்டலடித்துவிட்டு, பாசிச எதிர்ப்பு என ஒன்றுமில்லை என்று அதைக் கடந்து போகிறார். இது, பாஜக எதிர்ப்பு தேவையற்றது என்ற பொருளை உணர்த்துகிறது. எனவே, பாஜக எதிர்ப்பில் அவர் உறுதியாக இல்லை என்பதை, அவரது உரை மூலம் உணரமுடிகிறது.
அதேநேரத்தில், விஜய் உரையில் திமுக எதிர்ப்பு அதிகம் உள்ளது. அவரிடம் மக்கள் எதிர்பார்த்த ஆக்கப்பூர்வமான அறிவிப்புகள் ஏதுமில்லை. கொள்கைப் பிரகடனமும், செயல்திட்டமும் இல்லை என்பது ஏமாற்றம் அளிக்கிறது.கூட்டணி ஆட்சி என்று விஜய் அறிவித்துள்ளது, திமுக கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தும் முயற்சியாகத்தான் பார்க்கிறேன்.
» தீபாவளியை முன்னிட்டு அரசு பேருந்துகளில் பயணிப்போர் எண்ணிக்கை அதிகரிப்பு: அமைச்சர் சிவசங்கர் தகவல்
» கோவையில் தீபாவளிப் பண்டிகையையொட்டி கொடிசியா மைதானத்தில் இருந்து ஆம்னி பேருந்துகள் இயக்கம்
உண்மையில் அதிகாரப் பகிர்வு அளிப்பதாக இருந்தால், அவர் மறைமுக செயல்திட்டமாகத்தான் கையாண்டிருக்க வேண்டும். திரைமறைவில் பேச வேண்டியதை, வெளிப்படையாகப் பேசுகிறார் என்றால், திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தப் பார்க்கிறார் என்றுதான் பொருள். அதிமுக, பாஜகவை விஜய் கண்டுகொள்ளவில்லை. அவர் திமுகவை மட்டுமே எதிரி என அடையாளப்படுத்தி உள்ளார். திமுக அரசுக்கு எதிரான அரசியல் மட்டுமே அவரிடம் மேலோங்கி இருக்கிறது. ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு என்ற கோரிக்கையில் உறுதியாக இருக்கிறோம். திமுக கூட்டணி வலுவாக இருக்கிறது என்ற முதல்வர் ஸ்டாலின் கருத்தை நான் வழிமொழிகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.