அரியலூர்: தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு அரசுப் பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணிப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கூறினார்.
அரியலூர் மாவட்டம் செந்துறை ஒன்றியம் முள்ளுக்குறிச்சி கிராமத்திலிருந்து, சென்னைக்கு புதிய வழித்தடத்தில் அரசுப் பேருந்து இயக்க தொடக்க நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. ஆட்சியர் பொ.ரத்தினசாமி முன்னிலை வகித்தார். அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கொடியை அசைத்து, பேருந்துப் பயணத்தை தொடங்கிவைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு அரசுப் பேருந்துகளில் கடந்த ஆண்டு 1.10 லட்சம் பேர் முன்பதிவு செய்திருந்த நிலையில், நடப்பாண்டு நேற்று முன்தினம் வரை மட்டுமே 1.42 லட்சம் முன்பதிவுகள் செய்யப்பட்டுள்ளன. அரசுப் பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணிப்போரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதுதவிர, முன்பதிவு செய்யாமல் பயணிப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கும் என்பதால், அதற்கேற்ப பேருந்து வசதிகள் செய்யப்பட்டுள்ளன. சென்னையில் இருந்து நேற்று முன்தினம் மட்டும் 1.11 லட்சம் பேர் அரசுப் பேருந்துகளில் சொந்த ஊர்களுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
» கோவையில் தீபாவளிப் பண்டிகையையொட்டி கொடிசியா மைதானத்தில் இருந்து ஆம்னி பேருந்துகள் இயக்கம்
» திருப்பூரில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.25 லட்சத்துக்கு மேல் மோசடி: தலைமறைவானவரை கைது செய்த போலீஸார்
ஆயுத பூஜை விடுமுறை நாட்களில் ஏற்கெனவே சோதனை முறையில் தனியார் ஒப்பந்தப் பேருந்துகள் இயக்கப்பட்டன. அதேபோல, தீபாவளிக்கும் தனியார் பேருந்துகள் ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்படுகின்றன. குறிப்பிட்ட செயலி மூலமாக தனியார் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாகப் புகார்கள் வந்துள்ளன. கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டிருப்பது தெரியவந்தால், அந்த தொகை பயணிகளுக்கு மீண்டும் வழங்கப்படுவதுடன், தொடர்புடைய வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில், அரசுப் போக்குவரத்துக் கழக விழுப்புரம் கோட்ட மேலாண் இயக்குநர் குணசேகரன், கடலூர் மண்டல பொதுமேலாளர் ராகவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்