கோவை: கோவை காந்திபுரத்தில் உள்ள ஆம்னி பேருந்து நிலையத்தில் இருந்து சென்னை உள்ளிட்ட மேற்கு மாவட்டங்கள், தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களுக்கு ஆம்னி பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தினமும் ஏராளமான பயணிகள் பயணிக்கின்றனர்.
வழக்கமாக, காந்திபுரத்தில் இருந்து மேற்குப்புற மாவட்டங்கள் நோக்கி செல்லும் ஆம்னி பேருந்துகள் லட்சுமி மில் சந்திப்பு, பீளமேடு, ஹோப்காலேஜ் வழியாக நகரை விட்டு வெளியேறுகின்றன. அதேபோல், டெல்டா மாவட்டங்கள், தென் மாவட்டங்கள் நோக்கி செல்லும் ஆம்னி பேருந்துகள் காந்திபுரத்தில் புறப்பட்டு லட்சுமி மில் சந்திப்பு, பீளமேடு, ஹோப்காலேஜ் சந்திப்பு, காமராஜர் சாலை, சிங்காநல்லூர் சந்திப்பு வழியாக ஒண்டிப்புதூரை அடைந்து நகரை விட்டு வெளியேறுகின்றன.
அவிநாசி சாலையில் உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை மேம்பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளாலும், தீபாவளிப் பண்டிகையையொட்டி பொதுமக்கள் பொருட்கள் வாங்க வந்து செல்வதால் வாகனப் போக்குவரத்து அதிகரித்து கடந்த சில நாட்களாக நெரிசல் நிலவியது. இதைத் தவிர்க்கவும், மக்கள் விரைவாக பயணிக்க ஏதுவாகவும், தீபாவளிப் பண்டிகையையொட்டி ஆம்னி பேருந்துகள் கொடிசியா மைதானத்தில் இருந்து புறப்படும் என மாவட்ட நிர்வாகத்தினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில், கொடிசியா மைதானத்தில் பயணிகள் காத்திருக்கும் வகையில் மேற்கூரையுடன் கூடிய இடவசதி, குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, மின்விளக்கு வசதி போன்றவை ஏற்படுத்தப்பட்டுள்ளது. திங்கள் (அக்.28) முதல் இங்கிருந்து ஆம்னி பேருந்து போக்குவரத்து தொடங்கினாலும், செவ்வாய் (அக்.29) இரவு முதல் முழுமையாக பயன்பாட்டுக்கு வந்தது. தங்களது அலுவலகத்தில் இருந்து புறப்படும் ஆம்னி பேருந்துகள், கொடிசியா மைதானத்துக்கு வந்து காத்திருக்கும் பயணிகளை ஏற்றிச் சென்றனர். சில ஆம்னி பேருந்து நிர்வாகங்கள், தங்களது அலுவலகத்தில் இருந்தே பயணிகளை ஏற்றிக் கொண்டு இங்கு வந்து காத்திருந்த மற்ற பயணிகளை ஏற்றிச் சென்றனர். இங்கு போக்குவரத்தை ஒழுங்குபடுத்த போலீஸாரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
» ‘தந்தேராஸ்’ ஜோர் - தங்கம் ரூ.20,000 கோடிக்கு விற்பனை; நாட்டில் மொத்த வர்த்தகம் ரூ.60,000 கோடி!