“இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதில் மத்திய அரசு முன்னுரிமை” - கோவையில் மத்திய இணை அமைச்சர் தகவல்

By இல.ராஜகோபால்

கோவை: “இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதில் மத்திய அரசு முன்னுரிமை அளிக்கிறது” என, மத்திய இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி தெரிவித்தார்.

மத்திய அரசு பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவன வளாகத்தில் இன்று நடந்தது. மத்திய இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி தலைமை வகித்து பணி நியமன ஆணைகளை வழங்கினார். நாடு முழுவதும் பல்வேறு மத்திய அரசு துறைகளில் 51 ஆயிரம் பணியாளர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் காணொலி காட்சி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். நாடு முழுவதும் 40 இடங்களில் இந்நிகழ்ச்சி நடந்தது.

கோவையில் நடந்த நிகழ்வில் தபால்துறை, ரயில்வே, மத்திய தொழில் பாதுகாப்பு படை என்பன உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தேர்வு செய்யப்பட்ட 191 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. மத்திய இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி பேசும் போது, “பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை உருவாக்குவதில் முன்னுரிமை அளித்து வருகிறது.

அவர்களை சிறந்த தொழில் முனைவோர்களாக மாற்றும் நோக்கத்தில் ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்களுக்கு அதிக ஊக்கம் அளித்து வருகிறது” என்றார். பாஜக தேசிய மகளிரணி தலைவரும் கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் பேசும் போது, “மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பணி வாய்ப்பு பெற்று உள்ளவர்கள், மக்கள் சேவையை முதன்மையாகவும் பெருமையாகவும் கருத வேண்டும். நாட்டின் இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு பல்வேறு கட்டங்களாக சிறப்பான முறையில் வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகிறது” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE