மதுரை: உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் நவ. 4 முதல் வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் தலைமையில் பணிபுரிந்து வரும் நீதிபதிகளின் 3 மாத சுழற்சி அடிப்படையிலான பணிக்காலம் இந்த வாரத்துடன் முடிகிறது. இதையடுத்து நவ. 4 முதல் அடுத்த 3 மாதங்கள் மதுரை அமர்வில் வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள், அவர்கள் விசாரிக்கும் வழக்குகள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன் விபரம்: நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், ஏ.டி.மரியாகிளேட் ஆகியோர் முதல் அமர்வில் பொதுநல மனு, குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு மனுக்கள் மற்றும் 2023 முதலான ரிட் மேல்முறையீடு மனுக்களை விசாரிப்பர். நீதிபதிகள் ஆர்.எம்.டி. டீக்காராமன், என்.செந்தில்குமார் இரண்டாவது அமர்வில் முதலாவது மேல்முறையீடு, தீர்ப்பாய மேல்முறையீடு, 2022 வரையிலான அரசுப் பணி தவிர்த்த பிற மேல்முறையீடு மனுக்களை விசாரிப்பர்.
நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், ஆர்.பூர்ணிமா ஆகியோர் 3-வது அமர்வில் ஆட்கொணர்வு மனுக்கள், குற்றவியல் மேல்முறையீடு மனுக்கள், 2022 வரையிலான அரசு பணி தொடர்பான மேல்முறையீடு மனுக்களை விசாரிப்பர். நீதிபதி எம்.நிர்மல்குமார் குற்றவியல் நடைமுறைச் சட்டம் 407 மற்றும் 482 பிரிவுகளின் கீழ் தாக்கல் செய்யப்படும் குற்றவியல் உண்மை மனுக்கள் மற்றும் 2024 முதலான ரிட் மனுக்களை விசாரிப்பார். நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், ஜாமீன், முன்ஜாமீன் மனுக்களையும், நீதிபதி ஜி.கே.இளந்திரையன், 2018 முதலான பொது மற்றும் கனிமம், சுரங்கம், பதிவுத்துறை ரிட் மனுக்களையும் விசாரிப்பர்.
» புதுச்சேரியில் நவ.4 முதல் ஆக்கிரமிப்புகள் அகற்றம்: ஆட்சியர் அறிவிப்பு
» ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் நிர்ணயம் - உரிய நடவடிக்கைக்கு வலியுறுத்தல்
நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, தொழிலாளர், உரிமையியல் மனுக்கள், தொழிலாளர் நீதிமன்றங்கள் மற்றும் கூட்டுறவு தீர்ப்பாயங்களுக்கு எதிரான மேல்முறையீடு மனுக்களையும், நீதிபதி பி.புகழேந்தி, 2022 வரையிலான அரசுப்பணி தொடர்புடைய ரிட் மனுக்களையும் விசாரிப்பர். நீதிபதி வி.சிவஞானம் 2006 வரையிலான இரண்டாவது மேல்முறையீடு மனுக்களையும், நீதிபதி ஜி.இளங்கோவன், உரிமையியல் சீராய்வு மனுக்கள் மற்றும் 2007 முதல் 2011 வரையிலான இரண்டாவது மேல்முறையீடு மனுக்களையும் நீதிபதி கே.முரளிசங்கர், கம்பெனி மேல்முறையீடு மற்றும் 2019 முதல் 2021 வரையிலான இரண்டாவது மேல்முறையீடு மனுக்களையும் விசாரிப்பர்.
நீதிபதி எஸ்.ஸ்ரீமதி, 2012 முதல் 2018 வரையிலான இரண்டாவது மேல்முறையீடு மனுக்களையும், நீதிபதி ஆர்.விஜயகுமார், 2023 முதலான அரசுப் பணி தொடர்பான ரிட் மனுக்கள், நீதிபதி என்.மாலா, நில சீர்த்திருத்தம், நில வாடகை, நில உச்சவரம்பு, நிலம் கையகப்படுத்தல், பட்டா, தகவல் அறியும் உரிமைச்சட்டம், தியாகிகள் ஓய்வூதியம் தொடர்பான ரிட் மனுக்களையும் விசாரிப்பர். நீதிபதி கே.குமரேஷ்பாபு, வரி, ஏற்றுமதி, இறக்குமதி, சுங்கம், மத்திய, மாநில கலால் மற்றும் ஆயத்தீர்வை, வனம், தொழில்துறை, மோட்டார் வாகனம், அறநிலையத்துறை தொடர்பான ரிட் மனுக்களையும், நீதிபதி எல்.விக்டோரியா கெளரி, 2018 முதலான எந்த தனி நீதிபதிக்கும் ஒதுக்கீடு செய்யப்படாத ரிட் மனுக்களையும் விசாரிப்பர்.
நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன், சிபிஐ, லஞ்ச ஒழிப்பு தொடர்பான மனுக்களையும், நீதிபதி ஆர்.கலைமதி, உரிமையில் இதர மேல்முறையீடு, உரிமையியல் இதர 2வது மேல்முறையீடு, தீர்ப்பாய மேல்முறையீடு மனுக்களையும் விசாரிப்பர். நீதிபதி கே.கோவிந்தராஜன் திலகவதி உரிமையில் சீராய்வு மனுக்களையும், நீதிபதி பி.வடமலை, குற்றவியல் சீராய்வு மனுக்களையும் விசாரிப்பர்.'' இவ்வாறு உயர் நீதிமன்ற செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.