ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் நிர்ணயம் - உரிய நடவடிக்கைக்கு வலியுறுத்தல்

By டி.ஜி.ரகுபதி

கோவை: தீபாவளியையொட்டி கோவையில் வசிக்கும் வெளிமாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல அரசுப் பேருந்துகளிலும், ஆம்னி பேருந்துகளிலும் முன்பதிவு செய்துள்ளனர். இதில், ஆம்னி பேருந்துகளில் வழக்கமான நாட்களில் இருக்கும் கட்டணத்தை விட, கூடுதல் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன.

இதுகுறித்து கோவை கன்ஸ்யூமர் வாய்ஸ் அமைப்பின் செயலாளர் நா.லோகு கூறிய தாவது: ஆம்னி பேருந்துகளில் வழக்கமான கட்டணத்தை விட, 2 மடங்கு, 4 மடங்கு கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. கோவையிலிருந்து சென்னைக்கு நேற்று ரூ.500 முதல் ரூ.1000 வரை இருந்த கட்டணம், தற்போது ரூ.1,000 முதல் ரூ.2 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. பெங்களூருக்கு ரூ.400 முதல் ரூ.700 வரை இருந்த கட்டணம் ரூ.1,000 முதல் ரூ.2,700 வரையும், திருநெல்வேலிக்கு ரூ.600 முதல் ரூ.1000 வரை கட்டணம் வசூலிக்கப்பட்ட நிலையில், ரூ.1,500 முதல் ரூ.2,600 வரையும் வசூலிக்கப்படுகிறது.

தூத்துக்குடிக்கு ரூ.700 முதல் ரூ.1000 வரை இருந்த கட்டணம் ரூ.1,400 முதல் ரூ.2 ஆயிரம் வரையும், பொன்னமராவதிக்கு ரூ.400 முதல் ரூ.500 வரை இருந்த கட்டணம் ரூ.1,400 முதல் ரூ.1,800 வரையும், புதுச்சேரிக்கு ரூ.600 முதல் ரூ.1,100 வரை இருந்த கட்டணம் ரூ.1,300 முதல் ரூ.2,100 வரையும் உயர்த்தப்பட்டுள்ளது.

இதேபோல், வேளாங் கண்ணிக்கு ரூ.700 முதல் ரூ.900 வரை இருந்த கட்டணம் ரூ.1,500 முதல் ரூ.1,700 வரையும், தஞ்சாவூருக்கு ரூ.450 முதல் ரூ.600 வரை இருந்த கட்டணம் ரூ.1,400 முதல் ரூ.2 ஆயிரம் வரையும், திருவாரூருக்கு ரூ.700 முதல் ரூ.900 வரை இருந்த கட்டணம் ரூ.1,000 முதல் ரூ.1,700 வரையும் வசூலிக்கப்படுகிறது.

தவிர, கடைசிநேர முன்பதிவின் போதும், சில பேருந்துகளில் இருக்கைகளுக்கு ஏற்ப கட்டணம் அதிகரித்து வசூலிக்கப்படுகிறது. கட்டணக் கொள்ளையை தடுக்க, அதிகாரிகள் சோதனை செய்து, பேருந்துகளின் பர்மிட்டை தற்காலிக ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து கோவை வட்டாரப் போக்குவரத்து இணை ஆணையர் அழகரசு கூறும்போது, ‘‘ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக இதுவரை புகார்கள் வரவில்லை. புகார்கள் வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அதிக கட்டணத் தொகை திரும்பப் பெற்றுத் தரப்படும். தவிர, ஆம்னி பேருந்துகளி்ல் அதிக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதா என்பதை கண்டறிய வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் தலைமையில் அதிகாரிகள் குழுவினர் நேற்று முதல் கோவையில் பல்வேறு இடங்களில் திடீர் தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்’’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE