புதுச்சேரி மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 6,668 வாக்காளர்கள் குறைவு: மொத்தம் 8,48,032 வாக்காளர்கள்!

By செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரி: புதுச்சேரி மாவட்டத்தில் இன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர்கள் பட்டியலில் 6,668 வாக்காளர்கள் குறைவு.

வாக்காளர் பட்டியல் திருத்த பணியின் ஒரு பகுதியாக, புதுவை மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் இன்று வரைவு வாக்காளர் பட்டியலை அனைத்து அங்கீகரிக்கப்பட்ட தேசிய, மாநில அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு வழங்கினார்.

இதன்பின் மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் கூறியதாவது: "தற்போதைய வரைவு வாக்காளர் பட்டியலின்படி புதுவை மாவட்டத்தில் (மாகி மற்றும் ஏனாம் பகுதிகள் உட்பட) 3 லட்சத்து 98 ஆயிரத்து 657 ஆண் வாக்காளர்கள், 4 லட்சத்து 49 ஆயிரத்து 246 பெண் வாக்காளர்கள் மற்றும் 129 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என மொத்தம் 8 லட்சத்து 48 ஆயிரத்து 32 வாக்காளர்கள் உள்ளனர். கடந்த முறை வாக்காளர் சேர்க்கையின் போது 24 ஆயிரத்து 484 வாக்காளர்கள் நீக்கப்பட்டனர்.

17 ஆயிரத்து 786 வாக்காளர்கள் புதுதாக சேர்க்கப்பட்டனர். இதனால் ஒட்டுமொத்தமாக 6 ஆயிரத்து 668 வாக்காளர்கள் குறைந்துள்ளனர். புதுச்சேரி மாவட்டத்தில் 18 முதல் 19 வயதுக்கு உட்பட்ட 14 ஆயிரத்து 36 வாக்காளர்கள் உள்ளனர். 20 முதல் 29 வயதுக்குட்பட்ட 1 லட்சத்து 56 ஆயிரத்து 465 வாக்காளர்களும் (10 சதவீதம்), 30 முதல் 39 வயதுக்குட்பட்ட 1 லட்சத்து 73 ஆயிரத்து 934 வாக்காளர்களும் (11 சதவீதம்), 40 முதல் 49 வயதுக்குட்பட்ட 1 லட்சத்து 87 ஆயிரத்து 515 வாக்காளர்களும் (12 சதவீதம்), 50 முதல் 59 வயதுக்குட்பட்ட 1 லட்சத்து 52 ஆயிரத்து 835 வாக்காளர்களும் (10.36 சதவீதம்) உள்ளனர்.

60 முதல் 69 வயதுக்குட்பட்ட 96 ஆயிரத்து 524 வாக்காளர்களும் (6 சதவீதம்), 70 முதல் 79 வயதுக்குட்பட்ட 49 ஆயிரத்து 203 வாக்காளர்களும் (3 சதவீதம்), 80 முதல் 84 வயதுக்குட்பட்ட 9 ஆயிரத்து 855 வாக்காளர்களும் (0.67 சதவீதம்), 85 வயதுக்கு மேல் 7 ஆயிரத்து 665 வாக்காளர்களும் (0.52 சதவீதம்) உள்ளனர். புதுவை மாவட்டத்துக்கு உட்பட்ட தொகுதிகளில் வில்லியனுார் தொகுதியில் அதிகபட்சமாக 45 ஆயிரத்து 703 வாக்காளர்களும், குறைந்தபட்சமாக உருளையன்பேட்டை தொகுதியில் 24 ஆயிரத்து 552 வாக்காளர்களும் உள்ளனர்.

கடந்த முறை திருத்த பணியின்போது மக்கள் அளித்த ஒத்துழைப்பால், இறந்தவர்களை அதிகளவில் நீக்க முடிந்தது. தற்போதும் வீடு, வீடாகச் சென்று வாக்காளர் சரிபார்க்கும் பணி நடத்த உள்ளோம். ஆகவே, பொதுமக்கள் இந்த அறிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் செய்து பிழையில்லா வாக்காளர் பட்டியல் தயாரிக்க உதவ வேண்டும்" என்று தேர்தல் அதிகாரி கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE