சென்னை: தமிழகம் முழுவதும் இன்று முதல் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் தொடங்கும் நிலையில், வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது. மேலும் சிறப்பு முகாம் நாட்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்படி, ஆண்டுதோறும் செப்டம்பர் முதல் டிசம்பர் வரையில் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யப்படுகிறது. அதன்பின் ஜனவரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். அந்த வகையில், இந்தாண்டுக்கான வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் இன்று தொடங்குகிறது. இதை முன்னிட்டு, வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.
தொடர்ந்து, இன்று முதல் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல், முகவரி மாற்றம், திருத்தம் செய்தல் உள்ளிட்டவற்றுக்கு விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் மற்றும் செயலி வாயிலாகவும் விண்ணப்பங்களை வழங்கலாம். நேரடியாக வாக்காளர் பதிவு அதிகாரியிடமும் உரிய படிவங்களை பெற்று விண்ணப்பிக்கலாம். இதுதவிர, பணியாற்றுவோர் வசதிக்காக 4 வார இறுதி நாட்களில் தமிழகம் முழுவதும் உள்ள 69 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன.
முன்னதாக, இ்ந்திய தேர்தல் ஆணையத்தால் நவ.9, 10 மற்றும் 23, 24 ஆகிய சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு முகாம்கள் நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், நவ.9-ம் தேதி தமிழக அரசால் பணி நாளாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, சிறப்பு முகாம் நாட்களில் நவ 9 மற்றும் 10-ம் தேதிக்குப் பதில், நவ.16, 17 ஆகிய இரு தினங்களும் முகாம் நடைபெறும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ அறிவித்துள்ளார்.
» லாட்டரி அதிபர் மார்ட்டின், அவரது மனைவி மீதான வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும்: ஐகோர்ட் உத்தரவு
» லண்டனில் அரசியல் படிப்பை முடித்துவிட்டு நவ.28-ல் தமிழகம் திரும்புகிறார் அண்ணாமலை
வரும் 2025 ஜனவரி 1-ம் தேதியை தகுதி நாளாக கொண்டு, புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, வீடு வீடாக சென்று வாக்காளர் பட்டியலை வாக்குச்சாவடி நிலை அலுவலர் சரிபார்த்தல், வாக்குச்சாவடி மறுசீரமைப்பு, வாக்காளர் பட்டியல் மற்றும் புகைப்பட அடையாள அட்டையில் உள்ள முரண்பாடுகளை நீக்குதல் உள்ளிட்ட பணிகள் கடந்த ஆகஸ்ட் 20-ம் தேதி தொடங்கி கடந்த 18-ம் தேதி வரை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.