ஓசூர் அருகே அனுமதியின்றி பதுக்கி வைத்திருந்த 10 டன் பட்டாசுகள் பறிமுதல்

By கி.ஜெயகாந்தன்

ஓசூர்: ஓசூர் அடுத்த பேகேப்பள்ளி அனுமதியின்றி குடேனில் பதுக்கி வைத்திருந்த 10 டன் பட்டாசுகளை போலீஸார் பறிமுதல் செய்து, குடேனுக்கு சீல் வைத்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த கர்நாடக மாநில எல்லையில் உள்ள அத்திப்பள்ளியில் கடந்தாண்டு பட்டாசு குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் தமிழகத்தை சேர்ந்த 15 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதனால் தமிழக மற்றும் கர்நாடக இரு மாநில அரசுகளும் ஜூஜூவாடி, அத்திப்பள்ளியில் இயங்கும் நிரந்தர பட்டாசு கடைகள் மற்றும் தீபாவளி பண்டிகையொட்டி தற்காலி பட்டாசு கடைகளுக்கு பல்வேறு நிபந்தனைகள் விதித்துள்ளது.

இந்நிலையில் ஓசூர் ஏஎஸ்பி அக்ஷய் அணில் வாக்கரே தலைமையில் போலீஸார் மற்றும் வருவாய்துறையினர் அனுமதித்ததை விட அதிகளவில் பட்டாசுகள் வைக்கப்பட்டுள்ளதா எனவும் மற்றும் அனுமதியின்றி பட்டாசு கடைகள் செயல்படுகிறதா என கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் ஓசூர் அடுத்த நல்லூர் பகுதியில் பட்டாசு பதுக்கி விற்பனை செய்வதாக ஏஎஸ்பி அக்ஷய் அணில் வாக்கரேவிற்கு வந்த தகவலையடுத்து நல்லூர் போலீஸார் பேகேப்பள்ளி மற்றும் பெத்தஎலசகிரியில் பகுதியில் சோதனை செய்தனர். அப்போது சரஸ்வதி லேஅவுட் பகுதியில் சந்திரசேகர ரெட்டி (50) என்பவர் பட்டாசு கடையில் 1500 கிலோவிற்கு அனுமதிவாங்கிக்கொண்டு 10 டன் பட்டாசுகளை குடோனில் பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து நல்லூர் போலீஸார் பட்டாசுகளை பறிமுதல் செய்து, குடேனுக்கு சீல் வைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள பட்டாசு கடை உரிமையாளரை போலீஸார் தேடி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE