விஜய் அரசியலுக்கு ‘ரியாக்‌ஷன்’கள் முதல் குரூப்-4 ரிசல்ட் வரை | டாப் 10 விரைவுச் செய்திகள்

By KU BUREAU

பாஜகவின் ‘சி’ டீம்தான் தவெக: அமைச்சர் ரகுபதி - விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த வி.சாலை கிராமத்தில் ‘வெற்றி கொள்கை திருவிழா’ என்ற பெயரில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு ஞாயிற்றுக்கிழமை பிரம்மாண்டமாக நடைபெற்றது. அந்த மாநாட்டில் கட்சியின் தலைவர் விஜய் பேசுகையில், ‘பிரிவினைவாதம், ஊழல் கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும்.

2026 சட்டப்பேரவை தேர்தலில் தனிப்பெரும்பான்மையோடு வெற்றி பெறுவோம். நம் கொள்கைகளை ஏற்றுக்கொண்டு வருபவர்களுக்கு ஆட்சி, அதிகாரத்தில் பங்களித்து அதிகாரப் பகிர்வு செய்யப்படும். மக்கள் விரோத ஆட்சியை ‘திராவிட மாடல் ஆட்சி’ என்று கூறி ஏமாற்றுகின்றனர்.

எங்கள் கட்சி வண்ணம் தவிர வேறு வண்ணத்தை எங்கள் மீது பூச முடியாது. மதசார்பற்ற சமூக நீதி கொள்கையை முன்னிறுத்தி செயல்பட இருக்கிறோம்’ என பேசியிருந்தார். இதற்கு அரசியல் கட்சிகளிடம் இருந்து தொடர்ந்து எதிர்வினைகள் வந்தவண்ணம் உள்ளன.

திமுகவின் மூத்த தலைவரும், சட்டத் துறை அமைச்சருமான ரகுபதி, “விஜய் பாஜகவின் ‘ஏ’ டீமும் இல்லை, ‘பி’ டீமும்’ இல்லை. அவர் பாஜகவின் ‘சி’ டீம்’. தமிழக வெற்றிக் கழக மாநாடு ஒரு பிரம்மாண்ட சினிமா மாநாடு. அதிமுக பற்றி பேசினால் எடுபடாது என்பதால் அந்தக் கட்சி பற்றி விஜய் பேசவில்லை. பாஜகவை வலுப்படுத்தும் வகையில், அதிமுக தொண்டர்களை பிரிப்பதே விஜய்யின் குறிக்கோள். திராவிட மாடல் ஆட்சியை மக்களிடம் இருந்து பிரிக்க முடியாது.

சிறுபான்மையினர் நலன் மற்றும் கொள்கைக்காக இரண்டு முறை ஆட்சியை இழந்த கட்சி திமுக. திராவிடம் தமிழகத்தில் இருந்து அகற்ற முடியாத சொல். இளைஞர்கள் நம்பும் ஓர் இயக்கமாக திமுக உள்ளது” என்று கூறினார்.

“ரஜினி அரசியலுக்கு வராததால்...” - தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, “பாஜகவில் இருந்து ரஜினியை அரசியலுக்கு கொண்டுவர முயற்சித்தார்கள். அவர் வரவில்லை என்பதால் அவருக்கு பதிலாக விஜய்யை ஏற்பாடு செய்திருப்பார்களோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது. நடிகர் விஜய் வருமான வரித் துறை சோதனையில் சிக்கியபோது, குற்றவாளியை போல் வருமானவரித் துறை காரில் அவரை அழைத்து சென்றனர். அப்போது அவருக்கு ஆதரவாக திமுக தான் குரல் கொடுத்தது” என்று கூறினார்.

இதனிடையே, திமுக மீதான தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜய்யின் விமர்சனம் குறித்து மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறும்போது, “எங்களின் கவனம் சிதறாது, சிதையாது” என்று பதிலளித்துள்ளார்.

‘விஜய் படிக்க வேண்டியது...’ - ரவிக்குமார் எம்.பி - விசிக எம்பி ரவிக்குமார் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில், “தனது கொள்கை வழிகாட்டிகளில் ஒருவராக புரட்சியாளர் அம்பேத்கரை விஜய் குறிப்பிட்டிருக்கிறார். மதச்சார்பின்மைதான் தனது கொள்கை என்று அறிவித்திருக்கும் விஜய், மாநாட்டு மேடையில் இந்து மதத்தின் குறியீடாக பகவத் கீதையையும், இஸ்லாம் மதத்தின் குறியீடாக குர்ஆனையும், கிறிஸ்தவ மதத்தின் குறியீடாக பைபிளையும் நினைவுப் பரிசாகப் பெற்றார்.

விஜய் பகவத் கீதையைப் படிப்பதோடு அதைப் பற்றி டாக்டர் அம்பேத்கர் எழுதியிருப்பதையும் படிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். இல்லாவிட்டால் அம்பேத்கரை சாரமற்ற வெற்றுக் குறியீடாகப் பயன்படுத்துவதில் போய் அது முடிந்துவிடும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அதிமுக போராட்டத்தின் மறுவடிவமே தவெக மாநாடு - “விஜய்யின் மாநாடு சிறந்த தொடக்கம். கொடி ஏற்றி பிறந்த குழந்தைக்கு பெயர் வைத்துள்ளார். இளைஞர்களின் தன்னெழுச்சியாக மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர். ஒட்டுமொத்த தமிழகமும் திமுகவுக்கு எதிர்ப்பாக இருக்கிறது என்பதற்கு, அதிமுக முன்னெடுத்த போராட்டம் எப்படி ஒரு சான்றாக இருக்கிறதோ, அதேபோல் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடும் உள்ளது. விஜய் கட்சி தொடங்கியதால் அதிமுகவுக்கு எள்முனை அளவும் பாதிப்பு இல்லை. எங்களுடைய போராட்டத்தின் மறு வடிவமாக விஜய்யினுடைய தவெக மாநாட்டை பார்க்கிறோம்” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.

பாஜக பாராட்டும், விமர்சனமும்! - பாஜக விளையாட்டுப் பிரிவு மாநிலத் தலைவர் அமர்பிரசாத ரெட்டி வெளியிட்ட அறிக்கையில், "திமுகவுக்கு முடிவு கட்டும் வகையில், நடிகர் விஜய் அரசியல் வருகை இருக்கிறது" என்று தெரிவித்துள்ளார். அதேநேரத்தில், பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத வெளியிட்ட அறிக்கையில், "அதிகார அரசியலுக்காக திமுக வழியில் வாக்கு வங்கி அரசியலுக்காக சீமான் பாதையில் விஜய் செயல்பட முடிவு செய்திருப்பது, மக்களை ஏமாற்றும் வகையில் உள்ளது. சீமானின் மறு உருவமாக, அரசியல் நடிகர் ஜோசப் விஜய் விளங்குவார் என்பது வெட்ட வெளிச்சமாகி விட்டது" என்று விமர்சித்துள்ளார்.

விஜய் கட்சிக் கொள்கைகள்: சீமான் கருத்து - “திராவிடமும், தமிழ் தேசியமும் இருகண்கள் என்ற அவருடைய கருத்துகள், எங்களுடைய கொள்கைக்கு நேர் எதிரானது. திராவிடமும், தமிழ் தேசியமும் ஒன்று இல்லை. கருவாட்டு சாம்பார் என்பது போல் இருக்கிறது, விஜய் இரண்டையும் சேர்த்துப் பேசியிருப்பது. இது என் நாடு, என் தேசம், இங்கு வாழுகின்ற மக்களுக்கான அரசியல் தமிழ் தேச அரசியல். எங்களுடைய கொள்கை தமிழ் தேசம். எனவே, எங்கள் இருவருடைய கொள்கையும் ஒன்றாக இல்லை. மொழிக் கொள்கையிலும் முரண்பாடு இருக்கிறது. மற்றபடி, சில விஷயங்களில் நாங்கள் சொல்வதையே அவரும் சொல்கிறார்” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

‘எதைப் பற்றியும் கவலைப்படாமல் பணியாற்றுங்கள்’ - “தமிழக மக்களிடம், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை நல்ல முறையில் சென்றடைந்துள்ளது. உங்கள் தொகுதியில், வேறு ஏதாவது பிரச்சினைகள் இருந்தாலும், உடனடியாக கட்சி தலைமைக்கு தெரியப்படுத்துங்கள். எதைப் பற்றியும் கவலைப்படாமல், உங்களுக்கு என்று கொடுக்கப்பட்டுள்ள பணிகளை செய்யுங்கள். மற்றதை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்” என்று சென்னையில் திங்கள்கிழமை நடந்த திமுக சட்டமன்றத் தொகுதி பார்வையாளர்கள் கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

மார்ட்டின் மீதான வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவு - லாட்டரி அதிபர் மார்ட்டின் மற்றும் அவரது மனைவி லீமாரோஸ் ஆகியோருக்கு எதிரான வழக்கை ஆலந்தூர் நீதிமன்றம் முடித்து வைத்தது தவறானது என கருத்து தெரிவித்துள்ள உயர் நீதிமன்றம், இந்த வழக்கை விசாரணை அமைப்புகள் மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டுள்ளது.

சிறப்பு முகாம் நாட்களில் மாற்றம்: தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் செவ்வாய்க்கிழமை தொடங்கும் நிலையில், வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. இந்நிலையில், சிறப்பு முகாம் நாட்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்திய தேர்தல் ஆணையத்தால் நவம்பர் 9,10 மற்றும் 23, 24 ஆகிய சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு முகாம்கள் நடக்கும் என அறிவிக்கப்பட்டன. இந்நிலையில், நவம்பர் 9-ம் தேதி தமிழக அரசால் பணி நாளாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, சிறப்பு முகாம் நாட்களில் நவம்பர் 9 மற்றும் 10-ம் தேதிக்குப் பதிலாக நவம்பர் 16, 17 ஆகிய இரு தினங்களும் முகாம் நடைபெறும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ அறிவித்துள்ளார்.

குருப்-4 முடிவுகள் வெளியீடு: காலியிடங்கள் 9,491 ஆக உயர்வு - தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாகவுள்ள 6,244 இடங்களை நிரப்புவதற்காக கடந்த ஜூன் 9-ம் தேதி ஒருங்கிணைந்த குரூப்-4 தேர்வு நடத்தப்பட்டது. இந்தத் தேர்வை 15 லட்சத்து 91 ஆயிரம் பேர் எழுதினர். இந்நிலையில், குருப்-4 தேர்வு முடிவுகள் திங்கள்கிழமை பிற்பகல் வெளியிடப்பட்டன. சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வானோர் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, காலியிடங்களின் எண்ணிக்கை முதலில் 6,244 ஆக இருந்த நிலையில் ,பின்னர் முதல்கட்டமாக 480-ம் அதன்பிறகு மேலும் 2,208-ம் என கூட்டப்பட்டு 8,932 ஆக அதிகரிக்கப்பட்டிருந்த நிலையில், புதிதாக மேலும் 559 காலியிடங்கள் சேர்க்கப்பட்டு தற்போது காலியிடங்களின் எண்ணிக்கை 9,491 ஆக உயர்ந்துள்ளது.

குருப்-4 தேர்வு முடிந்து 92 நாட்களில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வு முடிவுற்று 92 நாட்களில் முடிவுகள் வெளியிடப்படுவது டிஎன்பிஎஸ்சி வரலாற்றில் இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

நவ.28-ல் தமிழகம் திரும்புகிறார் அண்ணாமலை - லண்டனில் அரசியல் படிப்பை முடித்துவிட்டு நவம்பர் 28-ல் அண்ணாமலை தமிழகம் திரும்புகிறார். இதனைத் தொடர்ந்து ஜனவரி மாதம் இறுதியில் தமிழகத்தில் கிராமங்கள் தோறும் அண்ணாமலை நடைபயணத்துக்கு திட்டமிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE