கோவை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கோவை மாவட்டத்திலிருந்து பல்வேறு வழித்தடங்களில் மொத்தம் 2,495 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி இன்று (அக்.28) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: "தீபாவளி பண்டிகை முன்னிட்டு அக்டோபர் 28ம் தேதி முதல் அக்டோபர் 30ம் தேதி வரை மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கு செல்ல சிங்காநல்லூர் பேருந்து நிலையத்திலிருந்து 1,030 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, காரைக்குடி, கரூர் மார்க்கமாக செல்பவர்களுக்கு உதவும் வகையில் சூலூர் பேருந்து நிலையத்தில் இருந்து 300 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
மேட்டுப்பாளையம், சத்தியமங்கலம், ஈரோடு, சேலம், திருப்பூர் செல்பவர்களுக்கு காந்திபுரம் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து 540 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
» “பாஜகவின் ‘சி’ டீம் தான் விஜய்யின் தவெக கட்சி” - அமைச்சர் ரகுபதி விமர்சனம்
» மக்கள் பிரச்சினைகள் குறித்த விவாதம் இல்லை: சில நிமிடங்களில் நிறைவுற்ற நெல்லை மாநகராட்சி கூட்டம்
பொள்ளாச்சி, உடுமலை, பழனி, பாலக்காடு செல்ல உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து 100 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
இதுதவிர திருப்பூர், ஈரோடு, மதுரை, திருச்சி, தேனி, திண்டுக்கல் செல்ல மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து 100 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
ஊட்டி, குன்னூர், கூடலூர் செல்ல சாய்பாபாகாலனி புதிய பேருந்து நிலையத்திலிருந்து 175 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
மதுரை, திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், ராஜபாளையம் செல்ல பொள்ளாச்சி பேருந்து நிலையத்திலிருந்து 350 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
மேற்கண்ட நாட்களில் சிங்காநல்லூர் மற்றும் சூலூர் பேருந்து நிலையங்களிலிருந்து புறப்படும் பேருந்துகள் மற்றும் தென் மாவட்டங்களிலிருந்து கோவை மாவட்டத்துக்கு வரும் பேருந்துகள் அனைத்தும் பயணிகளை சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் மட்டுமே இறக்கிவிடவும் மற்ற பேருந்து நிலையங்கள் வழக்கம் போல் செயல்படவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்று செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.