“பாஜகவின் ‘சி’ டீம் தான் விஜய்யின் தவெக கட்சி” - அமைச்சர் ரகுபதி விமர்சனம்

By கே.சுரேஷ்

பாஜகவின் சி-டீம் தான் நடிகர் விஜயின் கட்சி என மாநில சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்தார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

விஜய் வெளியிட்டுள்ள கொள்கைகள் யாவும் திமுக கொள்கைகளின் நகல்கள்தான். அதில், சிலவற்றுக்கு மட்டும் கூடுதல் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் திமுகவின் திராவிட மாடல் ஆட்சியின் கொள்கைகளை தமிழக மக்களிடத்தில் இருந்து அகற்றிவிட முடியாது என்பது தெரிகிறது.

இதுவரை கட்சிகளில் ஏ-டீம், பி-டீம் பார்த்து இருக்கிறோம். நடிகர் விஜயின் கட்சி பாஜகவின் சி-டீம். தமிழக மக்களின் வெறுப்புக்கு ஆளாகி இருக்கிற ஆளுநர் ஆர்.என்.ரவியைப் பற்றி புகழ்ந்து பேசினால் எடுபடாது என்பதற்காகத்தான் அவரை எதிர்த்து விஜய் பேசி இருக்கிறார்.

அதேபோல, அதிமுகவைப் பற்றி பேசினால் எடுபடாது என்பதோடு, அதிமுகவில் உள்ள தொண்டர்களை இழுக்க வேண்டும். பாஜகவுக்கு வலுவூட்ட வேண்டும் என்பதற்காக அதிமுகவைப் பற்றி குறிப்பிடாமல் இருந்திருக்கலாம்.

ஊழலைப் பெற்றி பேச வேண்டும் என்றால் கடந்த அதிமுக ஆட்சியைப் பற்றிதான் விமர்சிக்க வேண்டும். நடைபெற்று வரும் திமுக ஆட்சியில் எந்த தவறுக்கும் இடம் கொடுக்கப்படவில்லை.

பழுத்த பழம்தான் கல்லடிபடும் என்பதைப்போல, திமுகவைப் பற்றி தாக்கி பேசினால்தான் மக்கள் மன்றத்தில் எடுபடும். தமிழகத்தில் பெரியார், அண்ணா, கருணாநிதி, ஸ்டாலின் இவர்களை மீறி யாரும் அரசியல் செய்துவிட முடியாது.

அதேபோல, இவர்ளைப் பற்றி பேசாமல் யாரும் அரசியல் செய்துவிடவும் முடியாது. மாநாட்டில் கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு அளிக்கப்படும் என விஜய் பேசி இருக்கிறார். முதலில் மக்களை சந்திக்க வேண்டும். அதன்பிறகு வேட்பாளர்களை நியமிக்க வேண்டும். வாக்குகளை பெற வேண்டும்

பெரும்பான்மை பெற்று ஆட்சிக்கு வரவேண்டும். அதன் பிறகுதான் ஆட்சியில் கூட்டணிக் கட்சிகளுக்கு பங்கு அளிப்பதைப் பற்றி பேச வேண்டும். திமுக கூட்டணியை யாரும் பிரித்துவிட முடியாது. முதல்வர் மு.க.ஸ்டாலின் மீதுள்ள பாசத்தை விட்டு கூட்டணி கட்சியினர் யாரும் பிரிந்து போக மாட்டார்கள்.

திமுக இளைஞரணி மாநாட்டில் சுமார் 7 லட்சம் பேர் கலந்துகொண்டனர். அதில் சுமார் 5 லட்சம் பேர் இளைஞர்கள்.இளைஞர்கள் திமுகவை நம்பி வந்துகொண்டு இருக்கிறார்கள் என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE