திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில் மக்கள் பிரச்சினைகள் எதுவும் பேசப்படவுமில்லை, விவாதிக்கப்படவுமில்லை. முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு முழுவுருவ வெண்கல சிலை அமைப்பது உட்பட 5 சிறப்பு தீர்மானங்கள் இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
திருநெல்வேலி மாநகராட்சி கூட்டம் மேயர் ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. மாநகராட்சி ஆணையர் சுகபுத்ரா, கவுன்சிலர்கள், அதிகாரிகள் பங்கேற்றனர். இக்கூட்டத்தை மேயர் தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் 5 சிறப்பு தீர்மானங்களை கொண்டுவந்தார். அத்தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அத்தீர்மானங்கள் விவரம்: "பாளையங்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினர் அப்துல் வஹாப் கோரிக்கையின்படி திருநெல்வேலி மாநகராட்சி வர்த்தக மைய வளாகத்தின் முன்புறம், வ.உ.சி. மணிமண்டபம் செல்லும் பாதையில், பெரியார் நினைவுத் தூண் அருகில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் முழுஉருவ வெண்கல சிலை அமைக்கப்படும். 44-வது வார்டு கவுன்சிலர் முகைதீன் அப்துல்காதரின் கோரிக்கையின்படி மேலப்பாளையம் ரயில் நிலையத்தில், அவ்வழியாக செல்லும் அனைத்து ரயில்களும் நின்று பயணிகளை ஏற்றி, இறக்கி செல்ல வேண்டும் ரயில்வே துறைக்கு கடிதம் அனுப்பப்படும்.
39-வது வார்டில் சிவந்திப்பட்டி சாலையில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இச்சாலையில் சுரங்கப் பாதை அமைப்பதை நிறுத்தம் செய்து ஒய் வடிவ பாலம் அமைக்க அரசுக்கு கடிதம் அனுப்பப்படும். திருநெல்வேலி நகராட்சி காலத்தில், நகராட்சிக்கு எதிர்புறம் வடக்கு பகுதியில் பல ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி, நகராட்சிக்கு நிரந்தர சொத்து ஏற்படுத்தியுள்ளனர். தற்போது அந்த இடத்தில் மாநகராட்சியின் வருவாயை பெருக்குவதற்காக ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வர்த்தக மையம் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.
» புதுச்சேரி சுயேச்சை எம்எல்ஏ விவகாரத்தில் சபாநாயகருக்கு கண்டனம்: பொதுநல அமைப்புகள் தர்ணா
» கோவை | ஒண்டிப்புதூரில் ரூ.4 கோடி மதிப்பிலான பொதுப் பயன்பாட்டு இடம் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்பு
இந்த வர்த்தக மையத்தின் வடபுறம் 10 ஏக்கர் நிலத்தை தனியாரிடம் இருந்து கையகப்படுத்த சிறப்பு தீர்மானம் நிறைவேற்றி அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். மாநகராட்சி அலுவலகத்தை விரிவுப்படுத்தும் வகையில் மாநகராட்சி அலுவலகத்தின் தென்புறம் 5 ஏக்கர் நிலத்தை தனியாரிடம் இருந்து கையக்கப்படுத்த சிறப்பு தீர்மானம் நிறைவேற்றி, அரசுக்கு அனுப்பவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இது தவிர மாநகராட்சி கூட்டத்தில் சாதாரண கூட்ட தீர்மானங்கள் 9 மற்றும் அவசர கூட்ட தீர்மானங்கள் 26 என்று மொத்தம் 35 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டது. பொதுமக்களின் பிரச்சினைகள் குறித்து கூட்டத்தில் கோரிக்கைகள், விவாதங்கள் ஏதும் நடைபெறாமல் சில நிமிடங்களிலேயே கூட்டம் நிறைவடைந்தது.
கூட்டம் நிறைவடைந்த பின் 6-வது வார்டு உறுப்பினர் பவுல்ராஜ், கோரிக்கை அட்டையுடன் அரங்கத்துக்கு வந்தார். தூய்மை பணிகளை ஒப்பந்த அடிப்படையில் வழங்க கூடாது என்று அவர் கோரிக்கை வைத்தார்.