புதுச்சேரி சுயேச்சை எம்எல்ஏ விவகாரத்தில் சபாநாயகருக்கு கண்டனம்: பொதுநல அமைப்புகள் தர்ணா

By செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரி: சுயேச்சை எம்எல்ஏ விவகாரத்தில் பேரவைத் தலைவரை கண்டித்து புதுச்சேரி பொதுநல அமைப்புகள் இன்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டன.

புதுவையில் பங்க் கடையில் மாமூல் தராததால் ரவுடிகளால் வியாபாரி சந்திரன் தாக்கப்பட்டார். அவருக்கு அரசு மருத்துவ மனையில் சிகிச்சை தரவில்லை என குற்றம் சாட்டி அரசு ஆதரவு சுயேச்சை எம்எல்ஏ நேரு ஸ்ட்ரெக்சரில் அவரை தள்ளிக்கொண்டு வந்து ராஜ் நிவாஸ் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டார். அதைத்தொடர்ந்து சட்டப்பேரவையில் முதல்வர் அறைக்கு நேரு வந்தார்.

வியாபாரி தாக்கப்பட்ட விவகாரத்தில் முதல்வர் ரங்கசாமி முன்னிலையில் பேரவைத் தலைவர் செல்வம், சுயேச்சை எம்எல்ஏ நேரு இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து சட்டப்பேரவை உறுதிமொழிக் குழு தலைவர் பதவியிலிருந்து நேரு எம்எல்ஏ நீக்கப் பட்டார். இதையடுத்து பேரவைத் தலைவர் செல்வத்துக்கு பொதுநல அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இந்த நிலையில், பேரவைத் தலைவர் செல்வத்தை கண்டித்து அண்ணாசாலை அருகே இன்று பொதுநல அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திராவிட விடுதலை கழகம் லோகு அய்யப்பன், தமிழ் மீனவர் விடுதலை வேங்கைகள் மங்கையர் செல்வம், மக்கள் வாழ்வுரிமை இயக்கம் ஜெகநாதன், தமிழர் தேசிய முன்னணி தமிழ் மணி, மக்கள் உரிமை கூட்டமைப்பு சுகுமாரன், திராவிடர் கழகம் அன்பரசன், தமிழர் களம் அழகர், தலித் மக்கள் பாதுகாப்பு இயக்கம் பிரகாஷ், ராஜா, தந்தை பெரியார் திராவிட கழகம் இளங்கோ உட்பட பல்வேறு அமைப்பு நிர்வாகிகள் இதில் பங்கேற்றனர். சட்டப்பேரவையின் மாண்புகளை பேரவைத் தலைவர் செல்வம் சீர்குலைத்து வருவதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பேசினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE