கோவை | ஒண்டிப்புதூரில் ரூ.4 கோடி மதிப்பிலான பொதுப் பயன்பாட்டு இடம் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்பு

By டி.ஜி.ரகுபதி

கோவை: கோவை ஒண்டிப்புதூர் அருகே ரூ.4 கோடி மதிப்பிலான பொதுப்பயன்பாட்டுக்கான 19 சென்ட் இடம் ஆக்கிரமிப்பில் இருந்து இன்று (அக்.28) மாநகராட்சி அதிகாரிகளால் மீட்கப்பட்டது.

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம், 57-வது வார்டுக்குட்பட்ட ஒண்டிப்புதூரில் எஸ்.எம்.எஸ் லேஅவுட் என்ற மனைப் பிரிவு கடந்த 1960ம் ஆண்டு பிரிக்கப்பட்டது. 6.64 ஏக்கரில் பிரிக்கப்பட்ட இந்த மனைப் பிரிவில் மொத்தம் 65 மனைகள் பிரிக்கப்பட்டன. இதில், பொதுப் பயன்பாட்டுக்கான இடமாக 65 சென்ட் ஒதுக்கப்பட்டது. பள்ளிக்கட்டிடம் மற்றும் பூங்காவுக்காக இந்த இடம் ஒதுக்கப்பட்டது.

இதில் 46 சென்ட் இடம், மனைப் பிரிவு உரிமையாளரால் கடந்த 1991ம் ஆண்டு கோவை மாநகராட்சிக்கு தானமாக கொடுக்கப் பட்டது. இந்த இடத்தில் தற்போது மாநகராட்சிப் பள்ளிக் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. மீதமுள்ள 19 சென்ட் இடம் மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்படவில்லை. அது மனைப் பிரிவின் உரிமையாளர்களால், 3 மனைகளாக பிரித்து விற்பனை செய்யப்பட்டது.

இந்த இடம் ஆக்கிரமிப்புதாரர்களால் கம்பி வேலி போட்டு மறைக்கப்பட்டிருந்தது. தவிர, இதில் 2 சென்ட் இடத்தில் ஒரு கட்டிடமும் கட்டப்பட்டுள்ளது. அதில் ஒரு அறையில் அரசியல் கட்சி அலுவலகம் ஒன்றும், மற்றொரு அறையில் ஒரு கடையும் செயல்பட்டு வந்தது. இந்த பொதுப்பயன்பாட்டு இடம் தொடர்பாக நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கில் மாநகராட்சிக்கு சார்பாக தீர்ப்பு வந்தது.

இதையடுத்து மேற்கண்ட ஆக்கிரமிப்பு இடத்தை மீட்க மாநகராட்சி ஆணையர் மா.சிவகுரு பிரபாகரன் உத்தரவிட்டார். அதன் பேரில், நகரமைப்பு அலுவலர் குமார், உதவி நகரமைப்பு அலுவலர் புவனேஸ்வரி தலைமையிலான குழுவினர் இன்று (அக்.28) காவல்துறையினரின் உதவியுடன், ஆக்கிரமிப்பில் இருந்த இடத்தை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். மின்வாரிய அதிகாரிகளால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு, அதன் பின்னர் பொக்லைன் இயந்திரங்களை பயன்படுத்தி ஆக்கிரமிப்பு இடத்திலிருந்த கட்டிடம் இடித்து அகற்றப்பட்டது.

தொடர்ந்து 19 சென்ட் இடத்தை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்ட மாநகராட்சி அதிகாரிகள், இந்த இடம் மாநகராட்சிக்கு சொந்தமானது என்ற அறிவிப்புப் பலகையையும் அங்கு வைத்தனர். மீட்கப்பட்ட இந்த இடத்தின் மதிப்பு ரூ.4 கோடி ஆகும். கிட்டத்தட்ட 64 வருடங்களுக்கு பிறகு மேற்கண்ட இடம் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டிருப்பதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE