கட்சித் துண்டு வீச்சு முதல் ‘சீட்’ குறியீடு வரை: விஜய்யின் தவெக மாநாடு ஹைலைட்ஸ்

By எஸ்.நீலவண்ணன்

விழுப்புரம்: தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்துள்ள வி.சாலையில் 'வெற்றி கொள்கை திருவிழா' என்ற பெயரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மாலை 3 மணிக்கு தொடங்கிய மாநாட்டில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து மாலை 4.03க்கு மேடைக்கு வந்த கட்சியின் தலைவர் விஜய் மேடைக்கு உற்சாகமாக வந்து தொண்டர்களைப் பார்த்து கையசைத்தார்.

பின்னர் 800 மீட்டர் நீளமுள்ள ரேம்பில் நடந்துவந்தார். அப்போது தொண்டர் ஒருவர் அவர்மீது வீசிய கட்சி துண்டை தன் தோளில் முதன் முதலாக அணிந்து கொண்டார். இதனைத் தொடர்ந்து தொண்டர்கள் வீசிய துண்டுகளை தன் தோளில் அணிந்து கொண்டார். தவறிய துண்டுகளை அவருடன் வந்த பவுன்சர்கள் சேகரித்தனர். பின்னர் மீண்டும் மேடைக்கு திரும்பிய விஜய் தன் தோளில் இருந்த கட்சி துண்டுகளை அங்கிருந்த டீபாயில் கவனமாக வைத்தார். ஒரே ஒரு துண்டை மட்டும் அணிந்துகொண்டார்.

இதனைத் தொடர்ந்து மேடையின் பின்னால் அமைக்கப்பட்ட திருப்பூர் குமரன், காமராசர், பெரியார், தமிழ் மன்னர்கள், வேலு நாச்சியார், அஞ்சலை அம்மாள் ஆகியோரின் படங்களுக்கு மலரஞ்சலி செலுத்தினார். இதன்பின் மாலை 4.24க்கு ரிமோட் மூலம் கட்சி பாடலான ''தமிழன் கொடி பறக்குது'' ஒலிக்க ரிமோட் மூலம் 100 அடி உயரமான கட்சி கொடியை ஏற்றினார்.

இதனை தொடர்ந்து தமிழ்தாய் வாழ்த்துடன் மாநாடு தொடங்கியது. முதலில் உறுதி மொழியை பொருளாளர் வெங்கட்ராமன் வலது கையை இடது மார்பில் வைத்து வாசித்தார். பின்னர் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வரவேற்புரையாற்றினார். கொள்கைப் பரப்பு செயலாளர் தாகிரா, தலைமை நிலைய செயலாளர் ராஜசேகர், மாவட்ட பொறுப்பாளர் பரணி பாலாஜி ஆகியோர் பங்கேற்றனர். இதனை தொடர்ந்து கட்சியின் கொள்கைப் பாடல் ஒலித்தது.

மேடையில் 5 இருக்கைகளில் கட்சியின் தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர், தலைமை நிலைய செயலாளர், கொள்கைப் பரப்பு செயலாளர் அமர்ந்து இருந்தனர். வேறு இருக்கைகள் மேடையில் இல்லாததால் இம்மாநாட்டில் வேறு யாரும் கட்சியில் இணையவில்லை என்பது குறியீடாக தெரிகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE