குன்னூர்: குன்னூர் வெலிங்டன் ராணுவ மையத்தில் 78-வது காலாட்படை தினத்தையொட்டி மலர் வளையம் வைத்து உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்திய சுதந்திரத்துக்குப் பின்னர் 1947-ம் ஆண்டு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பாளர்கள் காஷ்மீர் பள்ளத்தாக்கை ஆக்கிரமித்தனர். இதைத் தொடர்ந்து இந்திய ராணுவத்தின் ஒரு பிரிவான காலாட்படையினர் 1947-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 27-ம் தேதி காஷ்மீர் பள்ளத்தாக்கில், வானில் இருந்து தரையிறங்கி பாகிஸ்தானிய ஆக்கிரமிப்பாளர்களை ஸ்ரீநகரின் விமான தளத்தில் இருந்து விரட்டி அடித்தனர்.
எதிரிகளை விரட்டி இந்திய காலாட்படை காஷ்மீரையும் அதன் மக்களையும் காப்பாற்றியது. இதுவே இந்திய காலாட்படையின் முதல் வீரதீர செயலாக திகழ்கிறது. இதை கொண்டாடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 27-ம் தேதி காலாட்படை தினமாக கொண்டாடப்படுகிறது. காலாட்படை தினத்தை முன்னிட்டு நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் ராணுவ மையத்தில் உள்ள போர் நினைவு தூண் சின்னத்தில் போர்களில் பங்கேற்று உயர்நீத்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
» ஆரியப்படைவீடு கிராம குளத்தில் வளர்ப்புக்காக மீன்குஞ்சுகள் விட்ட எம்எல்ஏ
» தண்டையார்பேட்டை: 1,700 ஆக்கிரமிப்பு கட்டுமானங்களை 8 வாரத்துக்குள் அகற்ற அரசுக்கு உத்தரவு
இதில், வெலிங்டன் முப்படை அதிகாரிகள் பயிற்சி கல்லூரி கமாண்டென்ட் லெப்டினன்ட் ஜெனரல் வீரேந்திர வாட்ஸ் மற்றும் உயர் அதிகாரிகள், முன்னாள் ராணுவ வீரர்கள், பங்கேற்று போர் நினைவு சின்னத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். முன்னதாக பேண்ட் வாத்தியம் இசை இசைக்க ராணுவ அணிவகுப்பு நடந்தது.
விழாவில், வெலிங்டன் ராணுவ மையம், முப்படைகள் பயிற்சிக்கல்லூரி மற்றும் காலாட்படை பிரிவை சேர்ந்த பல அதிகாரிகள், இளநிலை அதிகாரிகள் மற்றும் பிற நிலை வீரர்கள் கலந்துகொண்டனர்.