ஆரியப்படைவீடு கிராம குளத்தில் வளர்ப்புக்காக மீன்குஞ்சுகள் விட்ட எம்எல்ஏ 

By சி.எஸ். ஆறுமுகம்

கும்பகோணம்: கிராமப்புறங்களில் மீன் உற்பத்தியினை அதிகரித்திட ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை கட்டுப்பாட்டிலுள்ள நீர்நிலைகளில் மீன்குஞ்சு இருப்பு செய்தல் திட்டத்தின் கீழ், கும்பகோணம் வட்டம், ஆரியப்படைவீடு கிராமத்தில் உள்ள குளத்தில் 3 வகையான மீன்குஞ்சுகளை வளர்ப்பதற்காக விடப்பட்டன.

மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் மானியக் கோரிக்கையில் கடந்த ஜூன் 22-ம் தேதி கிராமப்புரங்களில் மீன் உற்பத்தியினை அதிகரித்திட ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை கட்டுப்பாட்டிலுள்ள நீர்நிலைகளில் ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் மீன்குஞ்சுகள் இருப்பு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

அதன்படி, தமிழ்நாட்டில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை கட்டுப்பாட்டில் உள்ள குளங்களின் மீன் உற்பத்தி திறனை முழுமையாக பயன்படுத்தும் வகையில் 5000 'ஹெக்டேர் பரப்பளவுள்ள ஊராட்சிக் குளங்களில் ஒரு ஹெக்டேருக்கு 2000 மீன்குஞ்சுகள் வீதம் 1 கோடி மீன் குஞ்சுகள் இருப்பு செய்ய திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது.

இந்தநிலையில், தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டம், ஆரியப்படைவீடு கிராமத்தில் உள்ள குளத்தில் மீன் குஞ்சுகள் விடும் நிகழ்ச்சி நடைபெற்றது. கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை க. அன்பழகன், தலைமை வகித்து, அந்தக் குளத்தில் கட்லா, ரோகு, மிருகால் ஆகிய 3 வகையான மீன்குஞ்சுகளை வளர்ப்பதற்காக விட்டார்.

மாவட்ட ஊராட்சிக் குழுத்துணைத்தலைவர் எஸ்.கே.முத்துச்செல்வன், ஒன்றியக்குழுத் துணைத் தலைவர் டி.கணேசன், தேவானாஞ்சேரி ஊராட்சி மன்றத் தலைவர் ஜெ.சுதாகர், மீன்வளத்துறை உதவி இயக்குநர் என்.மணிகண்டன், மீன்வள ஆய்வாளர் ஆனந்தன் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இது தொடர்பாக அதிகாரி கூறியது: ''தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 14 வட்டாரங்களில் 150 ஹெக்டேர் பரப்பளவில் உள்ள குளங்களில் 3 வகையான மீன் குஞ்சுகள் வளர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 1 ஹெக்டேர் பரப்பளவில் உள்ள குளத்தில் 2 ஆயிரம் குஞ்சுகள் வீதம் மொத்தம் ரூ. 6 லட்சம் மதிப்பில் 3 லட்சம் மீன்குஞ்சுகள் தயார் நிலையில் உள்ளன, முதற்கட்டமாக ஆரியப்படைவீடு கிராமத்தில் தொடங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மீதம் உள்ள 13 வட்டாரங்களில் உள்ள குளங்களில் மீன்குஞ்சுகள் விடப்படும்.

இதன் மூலம், உள்நாட்டு மீன் உற்பத்தியை அதிகரிக்கப்பட்டு, உள்நாட்டு மீனவர்களின் சமூக பொருளாதார நிலை மேம்படுவதோடு, கிராமபுற மக்களுக்கு குறைந்த விலையில் புரதச்சத்து நிறைந்த, ஊட்டச்சத்து உணவு கிடைப்பதை உறுதி செய்யப்படும். தஞ்சாவூர் மாவட்டத்தில் இத்திட்டத்தின் மூலம் 30 முதல் 40 டன் மீன்கள் கூடுதலாக உற்பத்தி செய்யப்படும் எனத் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE