ஈரான் மீது  இஸ்ரேல் தாக்குதல் முதல் தவெக மாநாடு களத்தின் ‘ஹலைட்ஸ்’ வரை | டாப் 10 விரைவுச் செய்திகள்

By KU BUREAU

ஈரான் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்: காசாவில் ஹமாஸ் இயக்கத்தினருக்கு எதிராக இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. ஹமாஸுக்கு ஆதரவாக லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா இயக்கத்தினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினர். இதனால் லெபானான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி ஹிஸ்புல்லா முக்கிய தலைவர்களை கொன்றது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான், இஸ்ரேல் மீது கடந்த 1-ம் தேதி 180-க்கும் மேற்பட்ட சூப்பர் சோனிக் ஏவுகணைகளை வீசியது குறிப்பிடத்தக்கது. இந்தப் பின்னணியில், ஈரான் தலைநகர் தெஹ்ரானை குறிவைத்து இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை தற்போது நடத்தியுள்ளது.

ஈரானின் பாதுகாப்பு நிலைகளைக் குறிவைத்து இஸ்ரேலிய ராணுவம் சனிக்கிழமை வான்வழித் தாக்குதல் நடத்தியது. 20 நிலைகளைக் குறிவைத்து பல மணிநேரம் தாக்குதல் நடத்தியதில், ஈரான் ராணுவ வீரர்கள் இருவர் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலை ஈரான் உறுதி செய்தது. எனினும், தங்கள் ராணுவ நிலைகளில் பெரிதாக சேதம் இல்லை என்றே ஈரான் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் ராணுவம் சொல்வது என்ன? ஈரான் மிதான தாக்குதல் குறித்து இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், "இஸ்ரேலுக்கு எதிரான ஈரானின் தாக்குதல்களுக்கு இஸ்ரேலின் பதிலடியை நாங்கள் முடித்துவிட்டோம் என்பதை இப்போது என்னால் உறுதிப்படுத்த முடியும். நாங்கள் ஈரானில் உள்ள ராணுவ இலக்குகள் மீது துல்லியமான தாக்குதல்களை நடத்தினோம். இதன் மூலம், இஸ்ரேல் அரசுக்கு இருந்த உடனடி அச்சுறுத்தல்களை முறியடித்தோம். ஈரான் மீண்டும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துமானால், இஸ்ரேல் நாட்டையும் மக்களையும் காக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இஸ்ரேல் எடுக்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலுக்கு பதிலடி - ஈரான் எச்சரிக்கை: தங்கள் நாட்டின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 2 ராணுவ வீரர்கள் உயிரிழந்தததாக தெரிவித்துள்ள ஈரான். “எந்த ஒரு தாக்குதலுக்கும் ‘கடுமையான, சரிவிகித மற்றும் நன்கு கணிக்கப்பட்ட எதிர்வினை’ கட்டாயம் கொடுக்கப்படும்” என்று எச்சரித்துள்ளது. ‘எங்கள் நாட்டு மக்களின் மீது நடத்தப்படும் எந்த ஒரு தாக்குதலுக்கும் பதிலடி கொடுக்கும் உரிமை என்பது எங்களுக்கு உண்டு. இந்த நடவடிக்கைகளுக்கு சரியான பதிலடி கொடுக்கப்படும்’ என்று ஈரான் தெரிவித்துள்ளதாக உறுதியான தகவல்கள் வெளியாகியுள்ளன.

உலக நாடுகளின் ரியாக்‌ஷன் என்ன? ஈரானின் ராணுவ நிலைகளைக் குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களுக்கு உலக நாடுகள் பலவும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும், அனைத்து தரப்பினரும் கட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளன.

‘இந்தத் தாக்குதல் அப்பட்டமாக ஈரானின் இறையாண்மையை மீறும் செயல் மற்றும் சர்வதேச சட்டத்தை தெளிவாக மீறும் செயல்’ என்று பல்வேறு நாடுகளும் கண்டித்துள்ளன. குறிப்பாக, சவுதி அரேபியா, கத்தார், ஈராக், பாகிஸ்தான், ஓமன், மலேசியா தரப்புகளில் இருந்து வலுவான கண்டனக் குரல் எழுப்பப்பட்டுள்ளது. அதேவேளையில், இஸ்ரேலின் இந்தத் தாக்குதலுக்கு இரான் பதிலடி கொடுக்கக் கூடாது என இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தியுள்ளன.

சென்னை மெட்ரோ பணிகள்: முதல்வர் விளக்கம்: “சென்னை மெட்ரோ திட்டம் இரண்டாவது கட்டத்துக்கான பணிகளை விரைந்து செயல்படுத்துமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளேன். இப்பணிகளை முடிக்க இலக்கிடப்பட்டுள்ள கால வரையறைக்குள் பணிகளை முடிப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் எனது அரசும், அலுவலர்களும் மேற்கொண்டு வருகின்றனர்” என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

மிதக்கும் மதுரை: எதிர்க்கட்சிகள் விமர்சனம்: மதுரையில் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உணவு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை அரசும், மாநகராட்சியும் உடனடியாக வழங்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

“தமிழக அரசு மதுரை உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்ததால் ஏற்பட்டுள்ள பாதிப்பில் இருந்து பொது மக்களைப் பாதுகாக்க வேண்டும். தொடர் மழையின் தாக்கத்தில் இருந்து பொது மக்களைப் பாதுகாக்க தொடர் நடவடிக்கை தேவை,”என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

“மழை வெள்ளத்தால் மதுரை மாநகரம் தத்தளிக்கிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு அடிப்படை வசதிகளை கூட செய்து தராத திமுக அரசின் அலட்சியப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது” என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

மதுரை கனமழை பாதிப்பு: முதல்வர் விளக்கம் - “மதுரையில் தொடர்ந்து பெய்யவில்லை. வெள்ளிக்கிழமைதான் மழை பெய்திருக்கிறது. இரவோடு இரவாக தண்ணீரை எல்லாம் எடுத்தாகிவிட்டது. மாவட்டத்தின் இரண்டு அமைச்சர்களும் முகாமிட்டு பணி மேற்கொண்டு வருகிறார்கள். எட்டு இடங்களில்தான் வீட்டுக்குள் தண்ணீர் புகுந்திருக்கிறது. வேறு ஒன்றும் பிரச்சினையில்லை” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

பிரியங்கா சொத்து மதிப்பு: பாஜக குற்றச்சாட்டு - கேரளாவின் வயநாடு தொகுதியில் போட்டியிடுவதற்காக மனு தாக்கல் செய்துள்ள பிரியங்கா காந்தி வத்ரா, தனது மற்றும் தனது கணவரின் சொத்துகள் குறித்த முழு தகவல்களை வெளியிடவில்லை என்று பாஜக குற்றம் சாட்டியுள்ளது.

டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியது நியூஸிலாந்து! நியூஸிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் 113 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி படுதோல்வியை தழுவியது. இதன்மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் நியூஸிலாந்து கைப்பற்றியுள்ளது. மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா ஆறுதல் வெற்றி அடையுமா அல்லது ஒயிட்வாஷ் ஆகுமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

தவெக மாநாட்டு ஏற்பாடு ‘ஹலைட்ஸ்’: தமிழக வெற்றிக் கழத்தின் முதல் மாநில மாநாடு, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்துள்ள வி.சாலையில் ‘வெற்றிக் கொள்கைத் திருவிழா’ என்ற பெயரில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெறுகிறது. 100 அடி உயரமுள்ள கொடிக்கம்பத்தில் கட்சித் தலைவர் விஜய் கொடியேற்றி, கட்சியின் கொள்கைகளை வெளியிட்டு உரையாற்றுகிறார்.

இந்த மாநாட்டுக்காக 60 அடி அகலம், 170 அடி நீளத்துக்கு மேற்கூரையுடன் மேடை அமைக்கப்பட்டுள்ளது. மேடையில் இருந்து 800 மீட்டர் தொலைவுக்கு விஜய் நடந்து சென்று தொண்டர்களைச் சந்திக்கும் வகையில், உரிய பாதுகாப்பு வசதியுடன் உயர்நிலை பாதை அமைக்கப்பட்டுள்ளது.

மாநாட்டு மேடையில், ‘வெற்றிக் கொள்கை திருவிழா’ என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது. மாநாட்டு முகப்பு கோட்டை மதில் சுவர் போல், வடிவமைக்கப்பட்டு, அதன் மீது தமிழ்நாடு சட்டப்பேரவை வடிவில் மற்றொரு முகப்பு அமைக்கப்பட்டுள்ளது. தொண்டர்கள் அமர 55 ஆயிரம் இருக்கைகள் போடப்பட்டுள்ளன. தொண்டர்கள் மாநாட்டை சிரமமின்றி பார்க்கும் வகையில் மாநாட்டு பந்தலுக்கு உள்ளே தொடங்கி தேசிய நெடுஞ்சாலை வரை 40 எல்.இ.டி திரைகள் அமைக்கப்பட்டுள்ளன.

மாநாட்டுக்கு வரும் தொண்டர்களுக்கு வழங்குவதற்காக 5 லட்சம் தண்ணீர் பாட்டில்கள் மற்றும் ஒரு லட்சம் பிஸ்கட் பாக்கெட்டுகள் தயாராக வைக்கப்பட்டுள்ளது. மாநாட்டுக்கு வருவோருக்காக 300 மொபைல் கழிப்பறைகள் மற்றும் 700 குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. கட்சித் தலைவர் விஜய், 100 உயரமுள்ள கொடிக் கம்பத்தில் ரிமோட் மூலம் கட்சி கொடியேற்றி, கட்சியின் கொள்கைகளை வெளியிட்டு பேச உள்ளார். மாநாட்டை இரவு 9 மணிக்கு முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து நான்காயிரம் காவல் துறையினர் இந்த மாநாட்டுக்காக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே, “உங்களின் பாதுகாப்பான பயணத்தை எண்ணியபடியே மாநாட்டுக்கு வருவேன். நீங்களும் அதை மனதில் வைத்தே வாருங்கள். அப்படித்தான் வரவேண்டும். நமது மாநாட்டில் சந்திப்போம். மாபெரும் அரசியல் சரித்திரத்தை நிகழ்த்திக் காட்டுவோம்” என விஜய் கூறியுள்ளார்.

தீபாவளி சிறப்பு மளிகைத் தொகுப்பு ரூ.199, 299-க்கு விற்பனை: தீபாவளி பண்டிகையைொட்டி, “கூட்டுறவு கொண்டாட்டம்” என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து கூட்டுறவு விற்பனை பண்டகசாலைகள் மூலம் தீபாவளி சிறப்புத் தொகுப்பு மளிகைப் பொருட்கள் விற்பனை வருகின்ற அக்.28 முதல் நடைபெறவுள்ளதாக கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE