கோவையில் 59 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.1.50 கோடி பொதுப் பயன்பாட்டு இடம் மீட்பு

By டி.ஜி.ரகுபதி

கோவை: கோவை பீளமேடு அருகே 59 வருடங்களாக ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.1.50 கோடி மதிப்பிலான பொதுப் பயன்பாட்டுக்கான இடம் மாநகராட்சி நிர்வாகத்தால் இன்று மீட்கப்பட்டது.

கோவை மாநகராட்சி 27-வது வார்டு, பீளமேடு ஆவாரம்பாளையம் சாலையில் சாந்தி நகர் உள்ளது. இப்பகுதியில் கடந்த 1965-ம் ஆண்டு 5.54 ஏக்கர் பரப்பளவில் மனைப்பிரிவுகள் பிரிக்கப்பட்டன. இங்கு 55 மனைகள் ஏற்படுத்தப்பட்டன. அப்போது பொதுப் பயன்பாட்டுக்கான இடமாக (ரிசர்வ் சைட்) 54 சென்ட் இடம், இம்மனைப் பிரிவு வளாகத்தின் மூன்று இடங்களில் ஒதுக்கப்பட்டன. பொதுப் பயன்பாட்டுக்கான இடங்கள் உருவாக்கப்பட்டாலும், இந்த இடங்கள் முறையாக மாநகராட்சி வசம் ஒப்படைக்கப்படவில்லை.

அவை தனியாரால் ஆக்கிரமிப்புகளில் இருந்தது. இதையடுத்து மாநகராட்சி நிர்வாகத்தினர் சார்பில், நீதிமன்றம் மூலம் உத்தரவுகள் பெற்று, 2 பொது ஒதுக்கீட்டு இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. ஆனாலும், 3-வது இடமாக 11 சென்ட் இடம் தொடர்ந்து ஆக்கிரமிப்பில் இருந்தது. இதில் 6.5 சென்ட் இடத்தில் ஆக்கிரமிப்புதாரரால் கட்டிடம் கட்டப்பட்டது.

இந்த ஆக்கிரமிப்பு இடத்தையும் மீட்க உரிய நடவடிக்கை எடுக்கும்படி, தமிழ்நாடு ரிசர்வ்-சைட் பாதுகாப்புச் சங்கத்தினர் சார்பில் மாநகராட்சி நிர்வாகத்துக்கு தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது. தொடர்ந்து மாநகராட்சி நகரமைப்புப் பிரிவினர் சார்பில், ஆக்கிரமிப்பை அகற்ற ஆக்கிரமிப்புதாரருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஆனால், அகற்றப்படவில்லை. அதேசமயம் ஆக்கிரமிப்புதாரர் இவ்விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தை நாடினார்.

எனவே, இதில் மீதம் உள்ள பொது இடத்தை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்க, மாநகராட்சி ஆணையர் மா.சிவகுரு பிரபாகரன் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து நகரமைப்பு அலுவலர் குமார் தலைமையிலான மாநகராட்சி அதிகாரிகள், அந்த இடத்தை மீட்கும் பணியில் இன்று (அக்.26) ஈடுபட்டனர். காவல்துறையினர் பாதுகாப்புடன் பொக்லைன் இயந்திரங்களை பயன்படுத்தி அந்த இடம் இன்று ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டது. மீட்கப்பட்ட இடத்தில், இந்த இடம் மாநகராட்சிக்கு சொந்தமானது என்ற அறிவிப்புப் பலகையும் வைக்கப்பட்டது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, “சுமார் 59 வருடங்களாக ஆக்கிரமிப்பில் இருந்து இந்த இடம் மீட்கப்பட்டது. மீட்கப்பட்ட இந்த இடத்தின் மதிப்பு ரூ.1 கோடியே 50 லட்சம் ஆகும். மீட்கப்பட்ட இடத்தை சுற்றிலும் கல் போட்டு யாரும் அத்துமீறாதபடி கம்பிவேலி போடப்பட்டுள்ளது. அங்கு மாநகராட்சியின் அறிவிப்புப் பலகையும் வைக்கப்பட்டுள்ளது’’ என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE