ஆர்.பி.உதயகுமார் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்: மதுரை காவல் ஆணையரிடம் ஓபிஎஸ் அணி புகார்

By சுப.ஜனநாயகச்செல்வம்

மதுரை: முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் குறித்து அவதூறாக பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓபிஎஸ் அணியினர் இன்று மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார், ஓ.பன்னீர்செல்வத்தை விமர்சித்துப் பேசியதை அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி பற்றி பேசியதாக ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பொய்யான செய்தி பரப்புவதாக மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் ஆர்.பி.உதயகுமார் சில நாட்களுக்கு முன்பு புகார் மனு அளித்தார். அப்போது பேசிய ஆர்.பி.உதயகுமார், “கட்சியை காட்டிக்கொடுத்த எட்டப்பர் தான் ஒ.பன்னீர்செல்வம். பாண்டிய மண்டலம் பழனிசாமி கோட்டையாக மாறி வருவதை கண்டு பொறுத்துக்கொள்ள முடியாத பன்னீர்செல்வம் தூண்டிவிட்டு அவதூறை பரப்புகிறார். அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி பற்றி தொடர்ந்து அவதூறு பரப்பினால் பன்னீர்செல்வம் வீட்டை முற்றுகையிடுவோம்” என்றார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும், ஆர்.பி.உதயகுமார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இன்று மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் ஓபிஎஸ் அணியின் மாவட்டச் செயலாளரும், முன்னாள் எம்பி-யுமான கோபாலகிருஷ்ணன், வடக்கு மாவட்டச் செயலாளர் முருகேசன், மாநில இளைஞரணி செயலாளர் ராஜ்மோகன் ஆகியோர் தலைமையில் புகார் மனு அளித்தனர். அதில், “தமிழக முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர்செல்வத்தை பற்றி முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அவதூறாக பேசியுள்ளார். இது வருங்கால சமுதாய இளைஞர்களுக்கு தவறான முன்னுதாரணமாக இருக்கும். எனவே அவர் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளனர். மதுரை மாவட்ட எஸ்பி, மாவட்ட ஆட்சியர், தென்மண்டல ஐஜி ஆகியோரிடமும் இதேபோல் அவர்கள் புகார் மனுவை அளித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE