மதுரை குடிநீர் திட்ட குழாய்களில் ‘ஏர் வால்வ்’ அமைக்கும் பணி தீவிரம் @ லோயர் கேம்ப்

By என்.கணேஷ்ராஜ்

கூடலூர்: தேனி மாவட்டம் லோயர் கேம்ப் பகுதியில் இருந்து மதுரை மாநகராட்சி பகுதிக்கு குடிநீர் செல்லும் ராட்சத குழாய்களில் ஏற்படும் அழுத்தத்தை குறைப்பதற்காக லோயர் கேம்ப் பகுதியில் ஏர் வால்வ் அமைக்கும் பணி அதிவேகமாக நடைபெற்று வருகிறது.

மதுரை மாநகராட்சிக்கு ஒரு நாளைக்கு 371 மில்லியன் கன அடி குடிநீர் தேவைப்படுகிறது. தற்போது வைகை அணை மற்றும் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டங்கள் மூலம் 192 எம்எல்டி நீரே கிடைக்கிறது. வார்டு மற்றும் மாநகர விரிவாக்கம், மதுரைக்கு வந்து செல்லும் வெளியூர் மக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மதுரைக்கான நீர் தேவை அதிகரித்துள்ளது.

இதனை கவனத்தில் கொண்டு, ரூ.1,685.76 கோடி மதிப்பீட்டில் அம்ரூத் 3 திட்டம் 3 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இதன் மூலம் தேனி மாவட்டம் லோயர் கேம்ப் பகுதியில் முல்லை பெரியாறில் இருந்து தினமும் 125 மில்லியன் கனஅடிநீரைப் பெற திட்டமிடப்பட்டது. இதற்காக அங்கு தடுப்பணை, நீர்உந்து நிலையம் அமைக்கப்பட்டு நீரை கொண்டு செல்ல ராட்சத குழாய்களும் மதுரை வரை பதிக்கப்பட்டன. லோயர் கேம்ப்பில் இருந்து திண்டுக்கல் மாவட்டம் பண்ணப்பட்டி வரை கொண்டு செல்லப்படும் ஆற்று நீர் அங்கு சுத்திகரிக்கப்பட்டு பின் மதுரைக்கு குழாய் வழியே அனுப்பப்படும்.

தற்போது இத்திட்டத்தின் பெரும்பகுதி முடிவடைந்த நிலையில் வெள்ளோட்டம் பார்க்கப்பட்டு வருகிறது. இதற்காக சுத்திகரிக்கப்படாத ஆற்று தண்ணீர் லோயர் கேம்ப்பில் இருந்து ராட்சத குழாய்கள் வழியே அனுப்பப்பட்டு வருகிறது. நீர் கசிவு, ராட்சத குழாயின் நீர் அழுத்தத்தைத் தாங்கும் திறன் உள்ளிட்டவை வழிநெடுகிலும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் லோயர் கேம்ப்பில் இருந்து கூடலூர் வரை மேட்டுப்பாங்கான பகுதி என்பதால் நீர் அழுத்ததுடன் செல்லும் நிலை உள்ளது. இதனால் ஏற்படும் நீரின் வேகம், காற்றின் அழுத்தம் போன்றவற்றால் ராட்சத குழாய்களில் உடைப்பு ஏற்படும் நிலை உள்ளது. அதனால் காற்றின் அழுத்தத்தை குறைக்கும் வகையில் இப்பகுதிகளில் ‘ஏர் வால்வ்’ எனப்படும் காற்றை சமப்படுத்தும் குழாய்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. சுமார் 6 இடங்களில் இதுபோன்ற அமைப்புகள் அமைக்கப்பட்டு தற்போது இதற்கு இரும்பு வேலி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், “லோயர் கேம்ப் நீர் உந்து நிலையத்தில் இருந்து செல்லும் நீரினால் ராட்சத குழாய்களில் அழுத்தம் ஏற்படுகிறது. இதனால் குழாய்களுக்கு ஏற்படும் பாதிப்பை களையும் வகையில் ஆங்காங்கே ஏர் வால்வ் பொருத்தப்பட்டுள்ளன. தற்போது சோதனை ஓட்டம் மும்முரமாக நடைபெற்று வருகிறது. நவம்பரில் இத்திட்டம் செயல்பாட்டுக்கு வரும்” என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE