அரசின் திட்டங்கள் செயல்படுத்தப்படுவதை கண்காணிக்க நவம்பர் முதல் மாவட்டம்தோறும் கள ஆய்வு: முதல்வர் ஸ்டாலின் தகவல்

By KU BUREAU

நாமக்கல்லை தொடர்ந்து நவம்பர் மாத தொடக்கத்தில் கோவை மாவட்டத்தில் களஆய்வு மேற்கொள்ள இருப்பதாக முதல்வர் தெரிவித்துள்ளார். கள ஆய்வும், அரசின் சாதனை திட்டங்களும் தொடரும் அவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து திமுக தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: முதலீடுகளை ஈர்க்க நான் அமெரிக்கா செல்லும் முன்பு கூறியபடி, அமைச்சர்கள் அவரவர் துறை சார்ந்தும், அவரவர் மாவட்டங்களில் உள்ள பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டு அறிக்கை அளித்தனர். அவற்றை நான், துணை முதல்வர், மூத்த அமைச்சர்கள் பார்வையிட்டோம். 10 ஆண்டு அதிமுக ஆட்சியில், முடங்கியிருந்த தமிழகத்தின் வளர்ச்சி, உள்கட்டமைப்பை மேம்படுத்த, மாவட்ட வாரியாக ஆய்வுகளுக்கு திட்டமிட்டோம்.

மக்கள் பாராட்டு: இந்நிலையில் பருவமழை தொடங்கிவிட்டது. இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தொடக்கத்திலேயே சென்னை உட்பட பல பகுதிகளில் கனமழை பெய்த நிலையில், நான், துணை முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள், அரசு துறையினர் இரவு பகல் பாராமல் களத்தில் நின்று பணியாற்றியதை மக்கள் பாராட்டுகின்றனர். மழை தொடரும் நிலையில், தேங்கும் வெள்ள நீரை வடியச் செய்வது, போக்குவரத்துக்கும், அத்தியாவசிய தேவைக்கும் பாதிப்பின்றி உடனடி நடவடிக்கை போன்ற பணிகள் நடந்து வருகின்றன.

எதிர்க்கட்சிகள் அவதூறு: இதை பொறுக்க முடியாமலும், அரசியல் செய்ய எதுவும் கிடைக்காததாலும், எதிர்வரிசையில் இருப்பவர்கள், அரசு மீது அவதூறு பரப்ப முனைந்து, தோல்வி அடைந்துள்ளனர். பொது வாழ்வில் விமர்சனங்கள் சர்வசாதாரணம்தான் என்பதால், அவர்களது ஆதாரமற்ற விமர்சனங்களை கடந்து, மக்கள் பணிகளை அரசு தொடர்ந்து செய்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாகவே நாமக்கல் சென்றேன். சிலம்பக்கவுண்டர் பூங்காவில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலையை திறந்து வைத்தேன். கேரள ஏடிஏம்களில் கொள்ளையடித்து, தமிழகம் வந்த கொள்ளையர்களை பிடிப்பதில் திறமையாக செய்பட்ட காவல் துறையினரை ஏற்கெனவே பாராட்டி இருந்தேன். நாமக்கல் எஸ்.பி. ராஜேஷ்கண்ணன் தலைமையிலான தீரமிக்க காவல் துறையினரை நேரில் பாராட்டினேன்.

அருந்ததியர் முன்னேற்றம்: ரூ.19.50 கோடியில் அமைக்கப்பட்ட பேருந்து நிலையத்தை திறந்து வைத்தேன். பொம்மைக்குட்டைமேட்டில் நடந்த விழாவில் 16,031 பேருக்கு ரூ.146.56 கோடியில் நலத் திட்ட உதவிகளை வழங்கினேன்.

நான் துணை முதல்வராக இருந்தபோது, அருந்ததியருக்கு 3 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கும் தீர்மானத்தை சட்டப்பேரவையில் முன்மொழிந்தேன். கடந்த 15 ஆண்டுகளில் அருந்ததியர் சமுதாயத்தினர் முன்னேற்றம் கண்டிருப்பதை காணும்போது பெருமை கொள்கிறேன். நாமக்கல்லில் அவர்களது வசிப்பிடம் சென்று கோரிக்கைகளை கேட்டேன்.

சாதனை திட்டங்கள் தொடரும்: அரசு நிகழ்ச்சியில் பேசியபோது, ‘‘இந்த ஆட்சியில் அறிவிக்கப்படும் திட்டங்கள் அனைத்தும் நிச்சயம் நிறைவேற்றப்படும். திட்டங்கள் செயல்படுத்தப்படுவதை கண்காணிக்க நவம்பர் முதல் மாவட்டம்தோறும் நேரில் கள ஆய்வு செய்ய உள்ளேன்’’ என்று தெரிவித்தேன்.

பண்டிகை நாட்கள் முடிந்த பிறகு, நவம்பர் 5, 6-ம் தேதிகளில் கோவை சென்று கள ஆய்வை தொடங்க உள்ளேன். கள ஆய்வும் தொடரும். அரசின் சாதனை திட்டங்களும் தொடரும். அந்தந்த மாவட்டங்களில் கள ஆய்வு பணிகளை முடித்த பிறகு, கட்சி பணிகளையும் ஆய்வு செய்வேன். இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE