மதுரை: பசும்பொன்னில் தேவர் ஜெயந்தி விழா நாளை மறுநாள் தொடங்க உள்ள நிலையில் முத்துராமலிங்கத் தேவரின் தங்கக்கவசத்தை மதுரையில் உள்ள வங்கியில் பெற்ற அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சி.சீனிவாசன், அதை நினைவிடப் பொறுப்பாளரிடம் ஒப்படைத்தார்.
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் 117-வது ஜெயந்தி விழா மற்றும் 62-வது குருபூஜை விழா நாளை மறுநாள் (அக்.28) தொடங்கி 30-ம் தேதி வரை நடைபெறுகிறது. முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்திலுள்ள உள்ள அவரது உருவச்சிலைக்கு அதிமுக சார்பில் தங்கக்கவசம் அணிவிக்கப்படுவது வழக்கம்.
இந்த தங்கக்கவசம், மதுரை அண்ணா நகரிலுள்ள பாங்க் ஆஃப் இந்தியா வங்கிக் கிளையின் பெட்டகத்தில் உள்ளது. இதை ஆண்டுதோறும் பெற்று முத்துராமலிங்கத் தேவரின் சிலைக்கு அணிவிக்கப்படும்.
அதன்படி, வங்கிக் கிளையில் தங்கக்கவசத்தைப் பெறுவதற்கு அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், தேவர் நினைவிட பொறுப்பாளர் காந்திமீனாள் நடராஜன் ஆகியோர் நேற்று மதியம் வந்தனர். இவர்களிடம் வங்கிக் கிளை மேலாளர் அனிருத், தங்கக்கவசத்தை வழங்கினார். அதனைப் பெற்ற அதிமுக பொருளாளர், தேவர் நினைவிட பொறுப்பாளரிடம் ஒப்படைத்தார்.
» 2026 தேர்தல் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்: அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி நம்பிக்கை
» பாதயாத்திரையாக முதியோர் திருமலைக்கு வரவேண்டாம்: திருப்பதி தேவஸ்தானம் வேண்டுகோள்
அப்போது முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விசுவநாதன், செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி.உதயகுமார், மணிகண்டன், மாவட்டச் செயலாளர் ராஜன் செல்லப்பா எம்எல்ஏ, தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் வி.வி.ஆர்.ராஜ்சத்யன் உட்பட முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர். அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறும்போது, "அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியின் உத்தரவுப்படி, பொருளாளர் என்ற முறையில் தேவர் தங்கக்கவசத்தை ஒப்படைத்துள்ளோம். தேவர் குருபூஜை முடிந்து நவ.1-க்குப் பிறகு தங்கக்கவசம் மீண்டும் வங்கியில் ஒப்படைக்கப்படும்" என்றார்.
இதற்கிடையே, பசும்பொன் கொண்டுசெல்லப்பட்ட தங்கக்கவசம் நேற்று மாலை தேவர் சிலைக்கு அணிவிக்கப்பட்டது. தேவர் நினைவிடப் பொறுப்பாளர்கள் தங்கவேல், பழனி ஆகியோர் தங்கக் கவசத்தை அணிவித்து வணங்கினர். இதைத்தொடர்ந்து தேவர் சிலைக்கு 24 மணி நேரமும் ஆயுதம் தாங்கிய போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்