சென்னை: சட்டப்பேரவை தலைவர் அப்பாவு மீது அதிமுக வழக்கறிஞர் அணி இணை செயலாளர் பாபு முருகவேல் தொடர்ந்த அவதூறு வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் கடந்த ஆண்டு நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய சட்டப்பேரவை தலைவர் மு.அப்பாவு, ‘‘முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காலமானபோது, 40 அதிமுக எம்எல்ஏக்கள் திமுகவி்ல் சேர தயாராக இருந்தனர். ஆனால், அதை ஏற்க திமுக தலைவர் ஸ்டாலின் மறுத்துவிட்டார்’’ என்று தெரிவித்திருந்தார்.
அவரது இந்த பேச்சு அதிமுக எம்எல்ஏக்களுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக கூறி, அதிமுக வழக்கறிஞர் அணி இணை செயலாளர் ஆர்.எம்.பாபு முருகவேல் அவதூறு வழக்கு தொடர்ந்தார். சென்னை சிங்காரவேலர் மாளிகையில் எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது.
இந்நிலையில், இந்த வழக்கை ரத்து செய்யவும், விசாரணைக்கு தடை விதிக்கவும் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பேரவை தலைவர் அப்பாவு மனு தாக்கல் செய்தார். நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு இந்த மனு கடந்த 22-ம் தேதி விசாரணைக்கு வந்தது.
» ஆன்லைன் சூதாட்டம் நடத்துபவர்கள் மீது நடவடிக்கை: இணையவழி விளையாட்டு ஆணைய உறுப்பினர் தகவல்
» விஜய் கட்சி மாநாடு பரபரப்பு முதல் குமரி கனமழை வரை | டாப் 10 விரைவுச் செய்திகள்
அப்போது, பேரவை தலைவர் அப்பாவு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், ‘‘யாருடைய பெயரையும் குறிப்பிட்டு பேரவை தலைவர் பேசவில்லை. அதிமுக எம்எல்ஏக்கள் திமுகவில் சேர தயாராக இருந்ததாக அவர் கூறியது ஒரு தகவல் தானே தவிர, அவதூறு ஆகாது. அவரது பேச்சால் பாபு முருகவேலுவுக்கு எந்த பாதிப்பும் கிடையாது. பாதிக்கப்பட்ட அதிமுக எம்எல்ஏக்கள் யாரும் இந்த வழக்கை தொடரவில்லை. எனவே, இந்த அவதூறு வழக்கை ரத்து செய்ய வேண்டும்’’ என்று வாதிட்டார். இதற்கு ஆட்சேபம் தெரிவித்து, பாபு முருகவேல் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஜான் சத்யன் ஆஜராகி வாதிட்டார்.
இதையடுத்து, தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை தள்ளிவைத்த நீதிபதி ஜெயச்சந்திரன் நேற்று தீர்ப்பு வழங்கினார். ‘‘பேரவை தலைவர் அப்பாவு பேச்சு குறித்து அதிமுக சார்பில் யாரும் புகார் அளிக்கவில்லை. மனுதாரர் தனிப்பட்ட முறையில் இந்த அவதூறு வழக்கை தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை தொடர கட்சி சார்பில் அவருக்கு எந்த அங்கீகாரமும் வழங்கப்படவில்லை. எனவே, பேரவை தலைவருக்கு எதிராக பாபு முருகவேல் தாக்கல் செய்த அவதூறு வழக்கு ரத்து செய்யப்படுகிறது’’ என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்