விஜய் கட்சி மாநாடு பரபரப்பு முதல் குமரி கனமழை வரை | டாப் 10 விரைவுச் செய்திகள்

By KU BUREAU

2026 என்ற இலக்கை நோக்கி... - விஜய் கடிதம்: விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி முதல் மாநாடு விக்கிரவாண்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இதையொட்டி, அவர் தனது கட்சித் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் “உச்சபட்ச அரசியல் ஒழுங்கோடு, உலகமே உற்று நோக்கிப் போற்றும் விதமாகக் கொண்டாடுவோம் நம் வெற்றிக் கொள்கைத் திருவிழாவை. மாநாட்டுக்கு வரும்போது பாதுகாப்பையும், கட்டுப்பாட்டையும் மனதில் நிறுத்தி, பத்திரமாக வாருங்கள். நம் கழகக் கொடியைக் கைகளிலும் மனங்களிலும் ஏந்தி வாருங்கள்,” என்று கூறியுள்ளார். மேலும், ‘நம் தமிழ்நாட்டு மண்ணுக்கான வெற்றிக் கொள்கைகளைச் செயல்படுத்த உறுதிபூண்டு முழங்குவோம். 2026 என்ற இலக்கை நோக்கி, முதல் அடியை எடுத்து வைப்போம். வி.சாலை என்னும் வியூகச் சாலையில் சந்திப்போம், வெற்றி நிச்சயம்’ என்று விஜய் குறிப்பிட்டுள்ளார்.

தவெக மாநாட்டுக்கு முழு பாதுகாப்பு வழங்குக: பாஜக - “தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு ஞாயிற்றுக்கிழமை மாலை விழுப்புரத்தில் நடக்கிறது. இந்த மாநாட்டுக்கு எந்தவித இடர்பாடும் இல்லாமல், தமிழக அரசு முழுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளை சிறப்பாகச் செய்ய வேண்டும். தமிழக மக்களுக்கும் ஒரு மாற்று அரசியல் வேண்டுமென்ற அடிப்படையில், விஜய் நிச்சயம் ஊழல் அரசியல் கட்சிகளை விரட்டி அடிப்பார். நடிகர் விஜய் தமிழக அரசியலில் மிக கவனமாக செயல்பட்டு வெற்றிப் படிகளில் ஏற வேண்டும்" என தமிழக பாஜக தெரிவித்துள்ளது.

தவெக மாநாடு போஸ்டர்களால் பரபரப்பு: தமிழகத்தில் ஆளும் கட்சியை விமர்சிக்கும் விதமாக ‘விடியா அரசை வீழ்த்திட விக்கிரவாண்டி வாருங்கள், மன்னர் ஆட்சிக்கு முடிவு, தளபதியால் மக்களாட்சிக்கு விடிவு’ என்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர்கள், மதுரை தெற்கு மாவட்ட தொண்டரணி சார்பில் மதுரைக்குள் ஒட்டப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் வெள்ள அபாய முன்னறிவிப்பு திட்டம்: சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களில் மக்களுக்கு வெள்ளம் அபாயம் குறித்த தகவல்களை துரிதமாக வழங்க ரூ.68 கோடியில் நிகழ்நேர வெள்ளப் பெருக்கு முன்னறிவிப்பு திட்டம் செயல்படுத்தப்பட இருப்பதாக நீர்வளத் துறை செயலர் மணிவாசன் கூறியுள்ளார்.

அப்பாவு-வுக்கு எதிரான அவதூறு வழக்கு ரத்து: அதிமுக எம்எல்ஏ-க்களுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசியதாக பேரவைத் தலைவர் அப்பாவு-வுக்கு எதிராக அதிமுக நிர்வாகி தொடர்ந்த அவதூறு வழக்கை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உக்ரைன், மேற்கு ஆசியாவில் அமைதி: மோடி விருப்பம் - “உக்ரைன் மற்றும் மேற்கு ஆசியாவில் நிலவும் மோதல்கள் கவலை அளிக்கக்கூடியவை. அமைதியை நிலைநாட்ட இந்தியா அனைத்து வகையிலும் பங்களிப்புச் செய்ய தயாராக உள்ளது” என்று பிரதமர் மோடி தெரிவித்தார். இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள ஜெர்மனி பிரதமர், உக்ரைனில் நீண்ட காலமாக நிலவி வரும் மோதலுக்கு அரசியல் தீர்வு காண இந்தியா பங்களிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்த நிலையில், பிரதமர் மோடி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

உக்ரைன் போர் விளைவு - ஜெர்மனி பிரதமர் கருத்து: உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யா வெற்றி பெற்றால், அது உலகின் பாதுகாப்பு மற்றும் செழிப்புக்கு ஆபத்தை ஏற்படுத்திவிடும் என்று ஜெர்மனி பிரதமர் ஒலாஃப் ஸ்கோல்ஸ் தெரிவித்துள்ளார்.

இந்திய - சீன எல்லையில் முன்னேற்றம்: லடாக்கில் உள்ள உண்மையான எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டில் இரண்டு சர்ச்சைக்குரிய பகுதிகளில் இருந்து இந்திய, சீனப் படைகள் வெளியேற தொடங்கியுள்ளதாக பாதுகாப்பு அதிகாரிகள் ஊடகத்துக்கு தெரிவித்துள்ளனர். ஏற்றுக்கொள்ளப்பட்ட நல்லெண்ண முயற்சியின் ஒரு பகுதியாக இந்த 2 நிலைகளில் இருந்தும் ராணுவ உபகரணங்கள் திரும்பப் பெறப்படுவதாகவும் கூறப்படுகிறது. 4 ஆண்டு கால எல்லை மோதலில் ஒரு முக்கிய முன்னேற்றமாக இது கருதப்படுகிறது.

கரையைக் கடந்தது டானா புயல்: வங்கக் கடலில் உருவான டானா புயல் வெள்ளிக்கிழமை அதிகாலை ஒடிசாவில் கரையைக் கடந்தது. அப்போது மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது. புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட்ட ஒடிசா முதல்வர் மோகன் மாஜி, “மாநில அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் ஒரு உயிரிழப்புகூட ஏற்படவில்லை" என்று தெரிவித்தார். இதனிடையே, ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் மாநில கடலோரப் பகுதிகளில் கனமழையால் இயல்பு வாழ்க்கை முடங்கியது.

குமரியில் கனமழை - வெள்ள அபாய எச்சரிக்கை: கன்னியாகுமரி மாவட்டத்தில் விடிய விடிய இடைவிடாது கொட்டிய கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைகளில் இருந்து எந்நேரம் வேண்டுமானாலும் உபரிநீர் திறந்துவிடப்படலாம் என்பதால் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே, தெற்கு கேரள கடற்கரையை ஒட்டிய தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளின் மேல் ஒரு கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, சனிக்கிழமை தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் ஆகிய 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பிரதமரின் முத்ரா திட்ட கடன் வரம்பு உயர்வு: பிரதமரின் முத்ரா திட்டத்தின் கீழ் கடன் வரம்பு ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE