கோவையில் பயன்பாட்டுக்கு வந்த 24 புதிய தாழ்தள சொகுசுப் பேருந்துகள்

By டி.ஜி.ரகுபதி

கோவை: கோவையில் 24 புதிய தாழ்தள சொகுசுப் பேருந்துகள், பொதுமக்கள் பயன்பாட்டுக்காக இன்று மாலை தொடங்கி வைக்கப்பட்டது.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில், முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பு பயணிகளும் எளிதாக ஏறி பயணிக்க ஏதுவாக, தாழ்தள சொகுசுப் பேருந்துகள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டன. முதல் கட்டமாக சென்னையில் கொண்டு வரப்பட்டதைத் தொடர்ந்து மாவட்டம் வாரியாக இப்பேருந்துகள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டு வருகின்றன. அதில், கோவை மண்டலத்துக்கு 100 தாழ்தள சொகுசுப் பேருந்துகள் ஒதுக்கப்பட்டன.

அதில், முதல்கட்டமாக 24 பேருந்துகள் கடந்த வாரம் கோவைக்கு வந்தன. இந்த 24 பேருந்துகளை பயன்பாட்டுக்கு தொடங்கி வைக்கும் நிகழ்வு, கோவை கருமத்தம்பட்டியில் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனையில் இன்று (அக்.25) மாலை நடந்தது. இவ்விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி முன்னிலை வகித்தார்.

மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு இப்பேருந்துகளை பொதுமக்களின் பயன்பாட்டுக்காக கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில், மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன், முன்னாாள் சட்டப்பேரவை உறுப்பினர் கார்த்திக், போக்குவரத்துக் கழக பொதுமேலாளர்கள் செல்வகுமார், மோகன்குமார், துணை மேலாளர் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இப்புதிய பேருந்துகள் குறித்து போக்குவரத்துக்கழக அதிகாரிகள் கூறியதாவது: "இதில், உக்கடம் - சோமனூர் வழித்தடத்தில் 6 பேருந்துகளும், காந்திபுரம் -சோமனூர் வழித்தடத்தில் 6 பேருந்துகளும், காந்திபுரம் - துடியலூர் வழித்தடத்தில் 6 பேருந்துகளும், காந்திபுரம் - வாளையாறு வழித்தடத்தில் 4 பேருந்துகளும், காந்திபுரம் -வேலந்தாவளம் வழித்தடத்தில் 2 பேருந்துகளும் இயக்கப் படுகின்றன. இந்த தாழ்தள சொகுசுப் பேருந்து மிதவைப் பேருந்தாக செயல்படும்.

மிதவைப் பேருந்து போல் இருக்கும் இப்பேருந்துகளின் முன்புறம் மற்றும் பின்புறம் அச்சுப் பகுதிகளில் ஏர் சஸ்பென்சன் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. பேருந்தின் இரு கதவுகளும் மூடியிருந்தால் மட்டுமே பேருந்து இயங்கும். மேலும் வழக்கமான பேருந்துகளில் ‘கியர்’ இருக்கும். இப்பேருந்துகள் தானியங்கி முறையில் இயங்கக் கூடியதாகும்.

மாற்றுத்திறனாளிகள் எளிதாக சக்கர நாற்காளிகளுடன் ஏறி, இறங்கும் வகையில் சாய்வுதளங்களும் உள்ளது. பேருந்தின் படிக்கட்டு 300 மிமி உயரம் மட்டுமே உள்ளதால், அனைத்து வயது மகளிர்கள், வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் எளிதாக ஏறி, இறங்கலாம். பயணிகள் இறங்கும் இடங்கள் முன்கூட்டியே ஒலிப்பெருக்கியில் அறிவிப்பு செய்யப்படும்" என்று அதிகாரிகள் கூறினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE