ஆளுநர் ஆர்.என்.ரவி நெல்லை வருகை: காங்கிரஸ், இந்திய மாணவர் சங்கம் போராட்டம்

By அ.அருள்தாசன்

திருநெல்வேலி: திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று வந்தார். அவருக்கு எதிராக காங்கிரஸ் மற்றும் இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் 31-வது பட்டமளிப்பு விழா அபிஷேகப் பட்டியிலுள்ள பல்கலைக்கழக வளாகத்தில் நாளை நடைபெறவுள்ளது. இந்த விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று பட்டங்களை வழங்குகிறார். இதற்காக தூத்துக்குடி விமான நிலையத்துக்கு இன்று மாலை வந்த அவர், அங்கிருந்து காரில் திருநெல்வேலி அபிஷேகப்பட்டியிலுள்ள பல்கலைக்கழகத்துக்கு வந்தார்.

இந்நிலையில் பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினர் நியமன விவகாரத்தில் ஆளுநரை கண்டித்து அவர் வரும் வழியில் திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர். இதையடுத்து மாநகர காவல் துணை ஆணையர் அனிதா தலைமையில் அப்பகுதியில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். அப்போது ஆளுநரை கண்டித்து கோஷங்களை எழுப்பியவாறு வந்த இந்திய மாணவர் சங்கத்தினரை போலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

காங்கிரஸ் நூதன போராட்டம்: இதேபோல் ஆளுநர் பல்கலைக்கழகத்திற்கு செல்லும் வழியான கொக்கிரகுளம் பகுதியில் அமைந்துள்ள திருநெல்வேலி காங்கிரஸ் கமிட்டி அலுவலகம் முன் மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கர பாண்டியன் தலைமையில் தமிழ்த் தாய் மற்றும் மனோன்மணியம் சுந்தரனார் திருவுருவப் படத்திற்கு தமிழ் தாய் வாழ்த்து பாடி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஆளுநர் செல்லும் பாதையில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை மட்டும் ஒருசேர காங்கிரஸ் கட்சியினர் படித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையொட்டி அப்பகுதியிலும் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE