மழை பாதிப்பு: திருமங்கலம் ஆட்டு சந்தையில் ரூ.4 கோடியாக விற்பனை வீழ்ச்சி

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை: வழக்கமாக தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, திருமங்கலம் ஆட்டுச்சந்தையில் ரூ.6 கோடிக்கு விற்பனை நடந்த நிலையில், தொடர் மழையால் வியாபாரிகள் வருகை குறைந்து ரூ.4 கோடி வரைதான் விற்பனை நடந்துள்ளது.

திருமங்கலம் ஆட்டுச் சந்தை சோழவந்தான் ரோட்டில் சந்தப்பேட்டை பகுதியில் இயங்கி வருகிறது. வாரம் தோறும் வெள்ளிக்கிழமை கூடும் இந்த சந்தையில் வெளி மாவட்டங்களில் இருந்து ஆடு விற்பனைக்கும் மற்றும் வாங்குவதற்கும் வியாபாரிகள் அதிகளவில் வருவார்கள். வரும் 31ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. பண்டிகை காலங்களில் தமிழகத்தில் அனைவரும் அசைவம் உண்பது வழக்கம்.

அதன் அடிப்படையில் தீபாவளி பண்டிகைக்காக ஆட்டுக்கறி விரும்பி சாப்பிடுவார்கள். அதனால், தென் மாவட்டங்களில் பல்வேறு ஆட்டுச் சந்தைகள் இருந்தாலும் மிக முக்கிய ஆட்டுச் சந்தையான மதுரை மாவட்டம் திருமங்கலம் ஆட்டுச் சந்தை கருதப்படுவதால் திருவிழா போல் வியாபாரிகளை ஆடுகளை வாங்க வந்திருந்தனர்.

திருமங்கலம் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான ஆடுகள் விற்பனைக்கு வந்தன. இந்த சந்தையில் இளம் ஆடுகள் அதிகளவு விற்பனையாகும் என்பதால் திருமங்கலம் மட்டுமல்லாது மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆட்டு வியாபாரிகள் வாங்க வந்திருந்தனர்.

தீபாவளி பண்டிகை என்பதால் விற்பனையாகும் ஆடுகளின் விலை ரூ.5 ஆயிரம் ரூபாயில் இருந்து ரூ.20,000 வரை அதிகமாக விற்பனையானது. ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட வெளி மாநில, வெளி மாவட்ட ஆடுகளும் சந்தைக்கு விற்பனைக்கு வந்திருந்தன.

ஆடு விற்பனை செய்ய வந்த விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கூறியதாவது,"தீபாவளிக்கு முதல் சந்தை விறுவிறுப்பாக இருக்கும் என்று எண்ணி ஆடுகளை நல்ல முறையில் வளர்த்து விற்பனைக்காக கொண்டு வந்தோம். வியாபாரிகள் அதிக அளவில் வரவில்லை. தொடர் மழையால் வியாபாரிகள் வருகை குறைந்தது. முக்கிய பண்டிகை காலங்களில் இந்த சந்தையில் ரூ.6 கோடிக்கு மேல் விற்பனையாகும். ஆனால், நேற்று ரூ.4 கோடி அளவில் தான் விற்பனை நடந்துள்ளது" என்று விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கூறினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE