புதுச்சேரி: ரேஷன் கடை இல்லாத பகுதிகளில் பள்ளி, அங்கன்வாடிகளில் இலவச அரிசி விநியோகம்!

By செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரி: ரேஷன் கடை இல்லாத பகுதிகளில் பள்ளி, அங்கன்வாடிகளில் இலவச அரிசி விநியோகம் செய்யப்படும் என மாநில முதல்வர் ரங்கசாமி கூறியுள்ளார்.

புதுச்சேரியில் பல ஆண்டுகளாக மூடியிருந்த ரேஷன் கடைகளை திறந்து தீபாவளிக்காக இலவச அரிசி, சர்க்கரை விநியோகம் தொடங்கும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்தார். அதன்படி மேட்டுப்பாளையத்தில் ஆளுநர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி கடந்த 21ம் தேதி ரேஷன் கடையைத் இத்திட்டத்தை தொடங்கி வைத்தனர். ஆனால் பல பகுதிகளில் ரேஷன் கடைகள் திறக்கப்படவில்லை. அதனால் எங்கெங்கு பொருட்கள் விநியோகம் என்பதை தெரிவிக்க வேண்டும் என்று மக்கள் கோருகின்றனர்.

இதுகுறித்து முதல்வர் ரங்கசாமி இன்று கூறியதாவது, "அனைத்துப் பகுதிகளிலும் நியாயவிலைக் கடைகளின் இருப்பிடம் பொதுமக்களுக்குத் தெரியும். ஆகவே நியாயவிலைக் கடைகள் குறித்த குழப்பம் மக்களிடையே இல்லை. அதேசமயம், குறிப்பிட்ட பகுதியில் நியாயவிலைக் கடை இல்லாத நிலையில், அருகேயுள்ள பகுதி கடைகளில் அரிசி உள்ளிட்டவற்றை வாங்கிக் கொள்ளலாம். சுமார் 30 ரேஷன் கடைகள் மட்டும் திறக்கப்படாமல் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்த கடைகளுக்குப் பதிலாக அப்பகுதிகளில் உள்ள பள்ளி, அங்கன்வாடி மையங்கள் மூலம் இலவச அரிசி உள்ளிட்டவை பொது மக்களுக்கு வழங்கப்படவுள்ளன" என்று சொன்னார்.

இலவச அரிசி அடுத்த மாதம் வழங்கப்படுமா என்று கேட்டதற்கு, "நவம்பர் 14 அல்லது 15ம் தேதி முதல் மக்களுக்கு வழங்கப் படவுள்ளது. நியாயவிலைக் கடைகள் மூலமே இலவச அரிசி உள்ளிட்டவை விநியோகிக்கப்படவுள்ளது. அதற்குள் நியாயவிலைக் கடைகள் அனைத்தும் திறக்கப்பட்டுவிடும்” என்றார்.

ரூ.500 தீபாவளி பொருள்கள் விற்பனை எப்போது?: அதேபோல் தீபாவளிக்காக ரூ.1000 மதிப்புள்ள மளிகைப் பொருட்கள் ரூ.500-க்கு கான்பெட் மூலம் தட்டாஞ்சாவடி ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள விற்பனை மையத்தில் விற்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இதுவரை இவ்விற்பனை தொடங்கப்படவில்லை. இதுபற்றி கான்பெட் தரப்பில் விசாரித்தபோது, தீபாவளிக்கான மளிகைப் பொருட்கள் இன்னும் ஒரு சில தினங்களில் வழங்கப்படும். அதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும்" என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE